search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவம் என்ன ஆகிறது"

    • சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார்.
    • மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும்.

    பாவம் செய்த அத்தனைபேரும் குளித்து எழுவதால் அவர்கள் செய்த பாவத்தை எல்லாம் என் மீது சுமத்தி விடுகிறார்கள். இந்த பாவங்களை நான் எவ்வளவு காலம் தான் சுமந்து கொண்டிருப்பது? இந்த பாவங்கள் என்னை விட்டு அகல எனக்கு ஏதாவது விமோசனம் சொல்லுங்கள் என்று ஒருமுறை சிவனிடம் கங்கை கேட்டாள்.

    சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார். பிறகு அவர் உன் மீது பாவம் படிகிறது என்பது என்னவோ உண்மைதான். அது உன்னிடம் நிலையாக இருப்பதில்லை. நீ இமயமலையில் இருந்து புதிய நீரைக் கொண்டு வருகிறாய் ஒவ்வொரு விநாடியும் பழைய நீரைக் கொண்டு சென்று கடலிடம் சேர்ப்பித்து விடுகிறாய். அந்த நீரை கடல்ராஜா பெற்றுக் கொள்கின்றான்.

    அவற்றையெல்லாம் சூரிய பகவான் ஆவியாகக் கொண்டு சென்று வானத்திலே மழை நீர் மேகமாக்கி விடுகிறான். அதனால் பாவங்கள் உன்னிடத்திலோ அல்லது கடலிலோ தங்குவதில்லை. அதேபோல சூரிய பகவானிடமும் இருப்பதில்லை. மேகங்கள் மழையால் பூமியிலே பொழிந்து விடுகின்றன. ஆக அங்கேயும் பாவங்கள் தங்குவதில்லை.

    பூமியில் இருந்து கங்கை வழியாக மேல்நோக்கிச் சென்ற பாவங்கள், மீண்டும் பூமாதேவியிடமே வந்து உன்னிடத்தில் கலக்கின்றன. ஆக மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும். இந்த நிலையில் உன்னை முழுவதுமாக, பரிசுத்தமாக புனிதப்படுத்திக் கொள்வது என்பது மகான்களிடம் தான் உள்ளது. மகான்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருப்பவர்கள். எந்த நேரமும் இறைச்சிந்தனையிலேயே இருப்பவர்கள்.

    அத்தகைய மகான்கள் உன்னுடைய கங்கையிலே வந்து நீராடினால் உன்மீது படிந்திருக்கும் எவ்வளவு பெரிய பாவங்களும் தீயில் போட்ட சருகுகள் எப்படி அந்த நொடியிலேயே பொசுங்கி சாம்பலாகி விடுகிறதோ, அதுபோல மகான்களின் பாதங்கள் பட்ட மாத்திரத்தில் உன் மீதுள்ள பாவங்கள் நாசமாகி விடுகின்றன. உன்னை அவர்கள் புனிதப்படுத்தி விடுகின்றனர். எனவே நீ பயப்பட வேண்டாம் என்றார் சிவபெருமான்.

    அதன்படி இன்றும் ஜமதக்னி, கபிலர், பராசர் வேதவியாசர் போன்ற மாமுனிவர்கள் எல்லாம் தவம் செய்து கங்கையை புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கங்கை எப்போதும் ஞானிகளையும், மகான்களையும் தேடிக்கொண்டே இருக்கிறாள். சிலசமயம் அவளே ஞானிகளைத் தேடிப்போய், தன் மீது இருக்கும் பாவத்தை போக்கிக் கொள்கிறாள். பண்டரிநாதன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இப்படியொரு நிகழ்ச்சி நடந்து இருப்பதை அறியலாம்.

    கங்கைக்கரையில் வளர்ந்த நாகரிகம், பூஜாகாரியம், பித்ரு சாந்தம் இன்றுவரை தவறாது நடந்து வருகிறது. இந்த கங்கையை நமக்கு அளித்த பகீரதனுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். முதலில் பகீரதனை வணங்க வேண்டும். பிறகு கங்கையை வணங்குதல் வேண்டும்.

    ×