search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகி கைது"

    • சாத்தான்குளம் தி.மு.க. நகர துணை செயலாளர் வெள்ளபாண்டியன் என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.
    • 4 பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் ராஜதுரை (வயது47). பா.ஜ.க. முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகி.

    இந்நிலையில் அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சாத்தான்குளம் தி.மு.க. நகர துணை செயலாளர் வெள்ளபாண்டியன் (73) என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற தி.மு.க., எதிர் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, குரலை முடக்கப் பார்க்கிறது.
    • பா.ஜ.க. தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை எம்.பி. பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சினைகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள்.

    விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற தி.மு.க., எதிர் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப்போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

    கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு, எதிர்குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை தி.மு.க. அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இதுபோல தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப்போக்கு.

    பா.ஜ.க. தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
    • செல்வபாலன் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது30). இவர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது செல்வ பாலா செல்வா என்பவரது பதிவை பார்த்தேன். அதில் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அவதூறாக சித்தரித்தும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறு புகைப்படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

    இந்த அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவதூறு புகைப்படத்தை பதிவேற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவதூறு பதிவிட்டவர் தூத்துக்குடி குலையன்கரிசல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வபாலன் (29) என்பதும், இவர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபாலனை போலீசார் கைது செய்தனர்.

    • பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மோடிபிரசாத் (வயது40) என்பவர் பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவிடம் கட்சி நிதியாக ஒவ்வொரு பணியாளரிடம் இருந்து ரூ.50 வசூலித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தெரிந்ததும் பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் பணம் கேட்டு வரமாட்டேன் என அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி கடந்த 28-ந்தேதி சென்னை வந்திருந்தார்.
    • சிலைகளை உடைக்கவேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளதாக புளியங்குடியை சேர்ந்த தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

    புளியங்குடி:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி கடந்த 28-ந்தேதி சென்னை வந்திருந்தார்.

    அவரது வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மோடியின் உருவப்படம் மீது சிலர் கரி பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜனதா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    தென்காசி மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரும் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக பெரியார் சிலைகள் மீது அவதூறு செய்ய வேண்டும் எனவும், சிலைகளை உடைக்கவேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக புளியங்குடியை சேர்ந்த தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீடியோவை வெளியிட்டவர் புளியங்குடி அருகே உள்ள தாருகாபுரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன்(வயது 28) என்பதும், அவர் மாவட்ட பா.ஜனதா விளையாட்டு மேம்பாட்டு துறை தலைவராக இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ), 505 உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×