search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்களஞ்சியம்"

    • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
    • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    திருச்சி:

    காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

    சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

    தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

    அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

    இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

    இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

    இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
    • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

    நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×