search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் விலை உயர்வு"

    • பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.
    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.

    தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்திருந்தது. மே மாதம் மேலும் ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதனால் திருப்பூர் தொழில் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மேலும் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நூல் விலை ரூ.40 குறைந்தது. அதேபோல் இந்த மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்திருந்தது.

    அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 24-ம் நம்பர் ரூ.345-க்கும், 30-ம் நம்பர் ரூ.355-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 24-ம் நம்பர் ரூ. 335-க்கும், 30-ம் நம்பர் ரூ.345-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
    • தமிழக நூற்பாலைகள் இம்மாத நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 18 மாதங்களாக தொடர்ந்த ஒசைரி நூல் விலையேற்றம் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களை மட்டு மின்றி ஜாப்ஒர்க் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்க செய்தது. வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து உள்நாடு, வெளிநாடு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர் வருகை மிகவும் குறைந்தது.

    இதனால் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு திருப்பூரின் பின்னல் துணி உற்பத்தி சரிந்தது. துணி உற்பத்தி குறைந்ததால் டையிங், ரைசிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களின் இயக்கமும் மந்தமானது.

    பெரும்பாலான ஜாப்ஒர்க் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இயங்கி வருகின்றன. ஆர்டர் இழப்பால், பண சுழற்சி பாதிப்பு, தொழிலாளருக்கு தொடர்ந்து பணி வழங்கி அவர்களை தக்கவைத்து கொள்வதில் சிக்கல் என ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகின்றன.

    இந்தநிலையில் தமிழக நூற்பாலைகள் இம்மாத நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளன. இது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்க(சிம்கா) தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில ஆலைகள், கிலோவுக்கு 20 ரூபாய் விலையில் தள்ளுபடி அளிக்கின்றன. அந்தவகையில் கிலோவுக்கு 60 ரூபாய் வரை விலை குறைவாக நூல் கிடைக்கிறது.இதனால் பின்னலாடை உற்பத்தி செலவினம் குறைகிறது. எனவே கைவிட்ட ஆடை தயாரிப்பு ஆர்டர்களையும் கையாளும் திறன் கிடைத்திருக்கிறது. அபரிமிதமான நூல் விலையால், கடந்த 2 மாதங்களாக 50 சதவீத அளவிலேயே பின்னல் துணி உற்பத்தி நடந்துவருகிறது. நூல் விலை குறைய தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன் மூலம் முதலில் நிட்டிங் துறையும், தொடர்ந்து மற்ற ஜாப்ஒர்க் துறைகளும் வேகம்பெறும்.ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்கள் வருகையால் விரைவில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் வேகம் பெறும். குறிப்பிட்ட கால இடைவெளியில் டையிங், ரைசிங் என அனைத்து ஜாப்ஒர்க் துறைகளுக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும். புதிய பருத்தி சீசன் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. எனவே, வரும் மாதங்களில் நூல் விலை மேலும் குறையும். பின்னலாடை துறையை சூழ்ந்துள்ள சிக்கல்கள் முழுமையாக விலகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூல் விலை உயர்வால் வெளிநாட்டு ஆர்டர்களை வாங்க முடியாமல் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்
    • கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது

    கரூர்:

    உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, கைக்குட்டை, மேஜை விரிப்பான், கால்மிதியடி, கையுறை போன்றவை நேர்த்தியாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், இங்கிலாந்து, ஸீவிடன், டென்மார்க் நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.4000 கோடி வரை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் 2030&ம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி ஆர்டர் என்ற இலக்குடன் செயல்பட்டாலும், தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நூல் விலையால் உற்பத்தி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

    இதுதொடர்பாக கரூரில் ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் ஆர்.ஸ்டீபன் பாபு கூறும்போது, கரூரில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஜெர்மனி பிராங்க்பர்ட் என்ற நகரில் ஜவுளி கண்காட்சி ஜுன்.21 முதல் ஜுன்.24 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கரூரில் இருந்து 33 ஏற்றுமதியாளர்களும், இந்தியாவில் இருந்து 300 ஏற்றுமதியாளர்களும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை இந்தியா சார்பில் தமிழகம், பானிபட், கேரளா, ஆந்திரா, லூதியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட ஏராளமான இறக்குமதியாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு பார்வையிட்டனர்.

    இதில் கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்தது பழைய விலையே. ஆனால் தற்போது கரூர் மாவட்டத்தில் நூல்களின் விலை 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை மூலப்பொருளான நூலின் விலை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இந்திய ஜவுளியை நாடினாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் அவர்கள் இந்திய ஜவுளி உற்பத்திக்கு கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த விலையில் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலர் உபேந்திரபிரசாத்சிங்கிடம், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ள நூல் விலை குறித்தும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 9 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைந்தது குறித்தும் தெரிவித்தோம்.

    செயலரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைக்க இருக்கும் ரூ.3500 கோடி ஆர்டர் நமக்கு கிடைக்கும். இல்லேயல் சீனாவுக்கோ, வங்கதேசத்துக்கோ சென்று விடும்.

    எனவே மத்திய ஜவுளி அமைச்சகம் நூல் விலை உயர்வை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஊக்கத் தொகையை மீண்டும் 9 சதவீதம் வழங்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.
    • தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து திருப்பூர் பகுதியில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.உள்ளாடை ரகங்களில் இணைப்பதற்கான அனைத்துவகை எலாஸ்டிக் ரகங்களையும் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.கேரளாவில் இருந்து ரப்பர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் உள்ளிட்ட பிரதான மூலப்பொருட்களை எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பெறுகின்றன.வழக்கமாக ரப்பர் விலை திடீரென உயர்ந்து எலாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும். தற்போதுரப்பர் விலை சீராக உள்ளது.

    அதேநேரம் பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான இரு மாதங்களில் கிலோவுக்கு 20 ரூபாய் பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:-

    பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இதன் எதிரொலியாக 40 சதவீத அளவிலேயே எலாஸ்டிக் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கினாலும் போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்பதில்லை.அதனால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மூலப்பொருள் கொள்முதலுக்கான நிதி தேவை அதிகரித்துள்ளது.எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

    தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களோ, எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்தடிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்கிறது. முன் பணம் செலுத்தினால் மட்டுமே பாலியஸ்டர் நூல் கிடைக்கிறது.நிலுவை தொகை வசூலாவதில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை வழங்கினாலே போதும். எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நிதி நெருக்கடி பிரச்சினைகள் ஓரளவு தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நூல் விலை உயர்வு திருப்பூரின் பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    • பின்னலாடை துறையை காப்பாற்றவும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தியில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் திருப்பூர் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் திருப்பூர் பனியன்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. காட்டன் பனியன் தேவைக்கு இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்த வர்த்தகரும் திருப்பூர் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அதிகபட்ச வேலைவாய்ப்பினை இந்த துறை வழங்குவதால் இத்துறையை கையகப்படுத்தி தங்கள் மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்கள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் உதவி கோரி வரும் நிலையில், திருப்பூரில் அமைந்துள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி போன்றவை திருப்பூரை தொடர்ந்து முதலிடத்தில் வைத்துள்ளது.

    அதே போல் ஏற்றுமதியிலும் இந்திய அளவில் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் தொழில் மையமாக விளங்குகிறது. இந்நிலையில் நூல் விலை உயர்வு திருப்பூரின் பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நூல் விலையானது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

    கடந்த ஆண்டு ரூ.220க்கு விற்பனையாகி வந்த கிலோ நூல் விலை தற்போது ரூ.486 என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்பனையாகிறது.இதனால் ரூ.100க்கு விற்பனையாகி வந்த டீ-சர்ட்டை தற்பொழுது 200 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை ஏற்றம் குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்கள் பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பின்னலாடை துறையில் இந்தியாவிற்கு போட்டி நாடுகளாக சீனா, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்ளது. இந்த நாடுகளில் நூல் விலை குறைவாக உள்ள சூழலில் நம்மை விட 25 சதவீதம் விலை குறைவாக ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றனர்.

    இதன் காரணமாக ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு வர்த்தகர்கள் குறைவான விலை உள்ள போட்டி நாடுகளுக்கு தங்கள் ஆர்டர்களை கொடுக்க தொடங்கி உள்ளனர். உலக அரங்கில் 20 சதவீத பருத்தியை உற்பத்தி செய்யும் இந்தியா 3.7 சதவீத ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி மூலம் உலக பங்களிப்பை பூர்த்தி செய்கிறது.

    ஆடை துறையின் மிக முக்கிய மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் ஆகியவை நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுவது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மூலப்பொருட்கள் கொண்டு மதிப்பு கூட்டல் செய்து உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்ற நிலையில் மூலப்பொருட்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு தற்போது உள்நாட்டு தேவைக்கு இறக்குமதி செய்யும் சூழலுக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் நூல் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் உள்நாட்டில் பஞ்சு பதுக்கல் செய்யப்பட்டுள்ளதால் விலை உயர்வு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும், தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் வளமான ஆடை துறையை அழிக்கும் நோக்கில் இந்த தட்டுப்பாடு கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாலிஸ்டர் துணிகள் கொண்டு ஆடை உற்பத்தி செய்யப்பட்டால் லூதியானா போன்ற பிற மாநிலங்களுக்கு தொழில்துறை நகர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் ஆடை உற்பத்தியாளர்கள்.

    பாலிஸ்டர் துணி மற்றும் இழைகள் லூதியானாவில் தயாரிக்கப்படும் நிலையில், அங்கு உற்பத்தி செலவும் குறைவாகவே பிடிப்பதால் பல நிறுவனங்கள் தற்போதே தங்கள் நிறுவனத்தை லூதியானாவில் நிறுவ துவங்கி உள்ளனர். திருப்பூரிலும் உள்நாட்டு தேவைக்கான பனியன் ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50 சதவீதம் பாலியஸ்டர் ஆடைகளுக்கு மாறி உள்ளனர்.

    பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் காட்டன் ஆடைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த காட்டன் ஆடைகளை வாங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது . இதனால் விற்பனை சரிவடைந்து வருவதாகவும் இதனை ஈடு செய்ய பாலிஸ்டர் ஆடைகளை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து வருவதாகவும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் திருப்பூரில் வேலைவாய்ப்பு குறையும் அபாயம் உள்ளதாகவும், முழுமையாக பாலிஸ்டர் துணிக்கு பனியன் துறை மாறினால் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    எனவே பின்னலாடை துறையை காப்பாற்றவும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் ஆடை துறையைக் காப்பாற்ற தமிழக அரசு பருத்தி புரட்சியை ஏற்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்,

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 6 மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கி வைத்துள்ள பஞ்சை கண்டறிந்து சந்தைக்கு கொண்டுவரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக ரூ.80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    ×