search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள்  கவலை
    X

    காேப்புபடம்

    பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கவலை

    • பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.
    • தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து திருப்பூர் பகுதியில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.உள்ளாடை ரகங்களில் இணைப்பதற்கான அனைத்துவகை எலாஸ்டிக் ரகங்களையும் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.கேரளாவில் இருந்து ரப்பர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் உள்ளிட்ட பிரதான மூலப்பொருட்களை எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பெறுகின்றன.வழக்கமாக ரப்பர் விலை திடீரென உயர்ந்து எலாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும். தற்போதுரப்பர் விலை சீராக உள்ளது.

    அதேநேரம் பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான இரு மாதங்களில் கிலோவுக்கு 20 ரூபாய் பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:-

    பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இதன் எதிரொலியாக 40 சதவீத அளவிலேயே எலாஸ்டிக் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கினாலும் போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்பதில்லை.அதனால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மூலப்பொருள் கொள்முதலுக்கான நிதி தேவை அதிகரித்துள்ளது.எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

    தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களோ, எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்தடிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்கிறது. முன் பணம் செலுத்தினால் மட்டுமே பாலியஸ்டர் நூல் கிடைக்கிறது.நிலுவை தொகை வசூலாவதில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை வழங்கினாலே போதும். எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நிதி நெருக்கடி பிரச்சினைகள் ஓரளவு தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×