search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூல் விலை உயர்வால் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
    X

    நூல் விலை உயர்வால் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை

    • நூல் விலை உயர்வால் வெளிநாட்டு ஆர்டர்களை வாங்க முடியாமல் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்
    • கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது

    கரூர்:

    உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, கைக்குட்டை, மேஜை விரிப்பான், கால்மிதியடி, கையுறை போன்றவை நேர்த்தியாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், இங்கிலாந்து, ஸீவிடன், டென்மார்க் நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.4000 கோடி வரை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் 2030&ம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி ஆர்டர் என்ற இலக்குடன் செயல்பட்டாலும், தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நூல் விலையால் உற்பத்தி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

    இதுதொடர்பாக கரூரில் ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் ஆர்.ஸ்டீபன் பாபு கூறும்போது, கரூரில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஜெர்மனி பிராங்க்பர்ட் என்ற நகரில் ஜவுளி கண்காட்சி ஜுன்.21 முதல் ஜுன்.24 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கரூரில் இருந்து 33 ஏற்றுமதியாளர்களும், இந்தியாவில் இருந்து 300 ஏற்றுமதியாளர்களும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை இந்தியா சார்பில் தமிழகம், பானிபட், கேரளா, ஆந்திரா, லூதியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட ஏராளமான இறக்குமதியாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு பார்வையிட்டனர்.

    இதில் கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்தது பழைய விலையே. ஆனால் தற்போது கரூர் மாவட்டத்தில் நூல்களின் விலை 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை மூலப்பொருளான நூலின் விலை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இந்திய ஜவுளியை நாடினாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் அவர்கள் இந்திய ஜவுளி உற்பத்திக்கு கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த விலையில் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலர் உபேந்திரபிரசாத்சிங்கிடம், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ள நூல் விலை குறித்தும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 9 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைந்தது குறித்தும் தெரிவித்தோம்.

    செயலரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைக்க இருக்கும் ரூ.3500 கோடி ஆர்டர் நமக்கு கிடைக்கும். இல்லேயல் சீனாவுக்கோ, வங்கதேசத்துக்கோ சென்று விடும்.

    எனவே மத்திய ஜவுளி அமைச்சகம் நூல் விலை உயர்வை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஊக்கத் தொகையை மீண்டும் 9 சதவீதம் வழங்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×