search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுப்பு வீடுகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
    • வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது.

    மதுராந்தகம்:

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான தரம் மிகவும் மோசமாக இருப்பதாக காட்சி இருக்கும். தொட்டாலே அவ்வப்போது இடிந்து விழும் சிமெண்ட் பூச்சுகளை சரிசெய்யும் ஊழியராக காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்து இருப்பார்.

    திரைப்பட பாணியில் இதேபோல் மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. திறப்பு விழாவுக்கு முன்னதாகவே அதன் சிமெண்டு பூச்சுகள் கைகளால் தொட்டால் மணலாக பெயர்ந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    மதுராந்தகம் அருகே உள்ள கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் இருளர்களுக்கு மத்திய மாநில அரசு நிதியின் கீழ் 30 வீடுகளும், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக திருநங்கைகளுக்கு 50 வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன. இதன் மதிப்பீடு ரூ.5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.

    இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த வீடுகள் தரமற்றதாகவும் கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தொகுப்பு வீடுகளை சமீபத்தில் ஆய்வு செய்தனர். மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த இடத்தில் பேட்ச் ஒர்க் மட்டும் செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதற்கிடையே இந்த தரமற்ற வீடுகள் தொடர்பாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவற்றில் ஒருவர் கை வைத்து தேய்க்கும் போது சிமெண்டுகள் அப்படியே மணலாக திரிந்து விழுகின்றன. இதேபோல் பல வீடுகள் திறப்பு விழாவுக்கு முன்னதாகவே பழுதடைந்து பழைய வீடுகள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

    தொகுப்பு வீடுகள் மீண்டும் சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்து இருப்பதாக தெரிகிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி தொகுப்பு வீடுகளை கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக பயனாளியான அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கூறும்போது, திருநங்கைகளுக்கான தொகுப்பு வீடுகளை தரமற்ற முறையில் கட்டி உள்ளனர். தொட்டாலே சிமெண்டுகள் பெயர்ந்து விழுகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகார் அளித்தோம். தற்போது மோசமான நிலையில் கட்டப்பட்ட வீட்டை சரி செய்யும் பேட்ஜ ஒர்க் பணி மட்டுமே நடைபெறுகிறது. அதிகாரிகள் நேரடியாக முழு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தரமான புதிய வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட கட்டிடமும் இதே நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் .

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடு கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.பயனாளி தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் தற்போது தகுதியற்ற சில பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 160 வீடுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் எனக் கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 25 பெண்கள் உட்பட 40 பேர் இன்று காலையில் திரண்டு வந்தனர்.அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ரேஷன் அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க போவதாக கூறினார்கள். அங்கு பணியில் இருந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • மழை காலங்களில் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் அருந்ததியர் காலனி அமைந்துள்ளது.

    இங்கு குடியிருக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 26 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    அப்போது கட்டப்பட்ட வீடுகள் தற்போது அதிக அளவில் சேதமடைந்து அனைத்து வீடுகளிலும் மேல் தளங்கள் தளர்வடைந்து உட்புறம் உள்ள கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.

    கட்டப்பட்ட 26 குடியிருப்புகளும் ஒரே சமயத்தில் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் அந்த வீடுகளின் குடியிருக்கும் பொதுமக்கள் சமையல் செய்யும் பொழுது கான்கிரீட் பூச்சுகள் மற்றும் சிமெண்ட் மண் உள்ளிட்டவை பாத்திரங்களில் விழுந்து விடுவதால் சுகாதாரமான சமையல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அது மட்டுமல்லாமல் வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.

    திடீரென மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதால் பாதுகாப்பற்ற நிலையில் வீடுகள் இருப்பதால் அங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வாசலிலும், தெருக்களிலும் இரவில் தூங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    மேலும் மழை காலங்களில் வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருவதால் குடியிருக்க முடியாத சூழலில் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால் தற்பொழுது முழுமையாக சேதம் அடைந்துள்ள 26 வீடுகளையும் இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கனமழை காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.
    • பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்திரா காந்தி தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் கடந்த 1991 -ம் ஆண்டு கட்டப்பட்டன.

    வீடுகள் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தற்போது இங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து விடுகி ன்றன. மேலும் தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் குடும்பத்துடன் வசிக்கும் மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சிலர் வீடுகள் எப்போது இடிந்து விடுமோ என்று அச்சத்தில் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தோலம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். காலியாக இருக்கும் இந்த வீடுகளில் உபயோகப்படுத்தப்படாத பொருட்களை போட்டு வைக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து தோலம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வரக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சாந்தாமணி(50) என்பவர் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலானதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன. கட்டிடத்திலும் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது.இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் நாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருகிறோம். எனவே ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு தங்களது குடியிருப்பு பகுதியினை புனரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

    அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ்(30) கூறுகையில் குழந்தைகளுடன் இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் தாங்கள் கட்டிடம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், ஏற்கனவே பலமுறை குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டி ருக்கையில் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

    பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தங்களது வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
    • பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது.

    இதில் நகர சபை தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உத்தரவுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் முகமது இப்ராஹிம், வாரிய தொழில்நுட்ப அதிகாரி டோனி உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.
    • புதிய வீடுகள் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கூரைகளில் பூசப்பட்டிருக்கும் கலவை அவ்வப்போது பெயர்ந்து விழுவதாகவும், இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்படும் என்றும் இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே தேவராயபுரம் ஊராட்சியில் உள்ள சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொகுப்பு வீடுகள் பராமரிப்பு சாத்தூர் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரம், குறிச்சியார்பட்டி பகுதிகள் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப்பகுதியில் சுமார் 35 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அந்தப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ஆய்வு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், குறிச்சியார்பட்டி பஞ்சாயத்தில் 4 வீடுகளுக்கும், கோபாலபுரம் பஞ்சாயத்தில் 21 வீடுகளுக்கும் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடுகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஜெயக்குமார், குறிச்சியார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராஜ், ஒன்றிய பணி குழு மேற்பார்வளர்கள் கண்ணன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×