என் மலர்
உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் அரசின் 26 தொகுப்பு வீடுகள்
- மழை காலங்களில் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
- கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் அருந்ததியர் காலனி அமைந்துள்ளது.
இங்கு குடியிருக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 26 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அப்போது கட்டப்பட்ட வீடுகள் தற்போது அதிக அளவில் சேதமடைந்து அனைத்து வீடுகளிலும் மேல் தளங்கள் தளர்வடைந்து உட்புறம் உள்ள கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.
கட்டப்பட்ட 26 குடியிருப்புகளும் ஒரே சமயத்தில் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் அந்த வீடுகளின் குடியிருக்கும் பொதுமக்கள் சமையல் செய்யும் பொழுது கான்கிரீட் பூச்சுகள் மற்றும் சிமெண்ட் மண் உள்ளிட்டவை பாத்திரங்களில் விழுந்து விடுவதால் சுகாதாரமான சமையல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.
திடீரென மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதால் பாதுகாப்பற்ற நிலையில் வீடுகள் இருப்பதால் அங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வாசலிலும், தெருக்களிலும் இரவில் தூங்க வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும் மழை காலங்களில் வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருவதால் குடியிருக்க முடியாத சூழலில் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் தற்பொழுது முழுமையாக சேதம் அடைந்துள்ள 26 வீடுகளையும் இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.






