search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூங்கா நோன்பு"

    • பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (7-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (8-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.

    அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி நாளை (8-ந்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ×