search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர்"

    • மிமிக்ரி செய்கையை ராகுல் படம் பிடிக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது
    • வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நீங்கள் விவாதிக்கவில்லை என்றார் ராகுல்

    கடந்த டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அலுவல் நேரத்தில் கோஷங்களை எழுப்பினர்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக கூறி அவர்கள் கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டனர்.

    இரு அவைகளிலும் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது வரை 140க்கும் மேல் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று புதிய பாராளுமன்றத்தின் "மகர் துவார்" பகுதியில் பெரும்பாலான எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பேனர்ஜி, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் பேசுவதை போல் மிமிக்ரி செய்து காண்பித்தார். அதை பல எம்.பி.க்கள் நகைச்சுவையுடன் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தியும் தனது மொபைல் போனில் படம் பிடித்தார்.

    இவையனைத்தும் சமூக வலைதளங்களில் பரவியது.

    நேற்று மதியத்திற்கு பின் அவை கூடிய போது, தன்னை மிமிக்ரி செய்ததையும் அதனை வீடியோ படம் எடுத்ததையும் குறித்து துணை ஜனாதிபதி மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்தார்.

    அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் "என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்" என கூறினார்.

    மேலும், பிரதமருடனும் பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய ஜக்தீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி தனக்கு எதிராக தேவையற்ற விமர்சனங்களை கிளப்புவதாக ஊடகங்களை விமர்சித்தார்.

    ராகுல் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    யாரை யார் அவமானப்படுத்தினார்கள்? எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். ஊடகங்களும் வீடியோ எடுத்தன; நானும் வீடியோ எடுத்தேன். என் வீடியோ எனது மொபைலில்தான் உள்ளது.

    சுமார் 150 எம்.பி.க்கள் அவைக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதை குறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    அதானி குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்தும் விவாதிக்கவில்லை.

    நாடு முழுவதும் பாதித்துள்ள வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது; அது குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைந்த மனதுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களாகிய நீங்கள் மிமிக்ரி சம்பவம் குறித்து மட்டுமே விவாதிக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×