search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக விவசாயிகள்"

    • 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
    • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு, முல்லைக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதும் தமிழக பகுதிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கேரளாவுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியார், உப்புத்துறை, சப்பாத்து ஆகிய முல்லைப்பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7405 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியான பின்பு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அதற்கு மேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்ட பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    தற்போது தொடர்மழை நீடித்து வருவதால் 6-வது முறையாக 142 அடியை எட்டுமா என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் டிசம்பர் மாதத்தில் 142 அடியாக நிலைநிறுத்தலாம் என்று ரூல் கர்வ் நடைமுறை தெரிவித்துள்ளது. ஆனால் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டிய போதே இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் இருந்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்படும் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே மக்களை பீதியடைய செய்யும் வகையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    திருச்சி:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார்.

    பின்னர் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுத்தார். அதைத்தொடர்ந்து இன்று அரியலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்திரம் பஸ் நிலையம் வழியாக புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது கடந்த 30 நாட்களாக சத்திரம் அண்ணா சிலை அருகாமையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மோடி அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் கடனுக்காக வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. மேலும் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

    தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    • இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
    • தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்.

    மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்து விடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம்-54.91 அடி (120 அடி), நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி.). நீர் வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடி. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தி.மு.க. அரசு வாயையே திறக்கவில்லை.

    ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த தி.மு.க. அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் பெற இயலாது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    மேலும், இன்றுவரை சம்பா சாகுபடி குறித்தும், போதிய விதை நெல் மற்றும் உரங்கள் விநியோகம் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பையும் இந்த தி.மு.க. அரசு வெளியிடவில்லை. எனவே, எனது தலைமையிலான அம்மாவின் அரசு வறட்சிக் காலத்தில் செய்ததுபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என்று, ''நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்'' என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    டெல்டா விவசாயிகள் படும் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று பசப்புவார்த்தை பேசி பிரச்சனையை திசை திருப்ப, முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டை அ.தி.மு.க.வின் சார்பிலும், அல்லலுறும் வேளாண் பெருமக்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
    • அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்கு பின்னர் அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என அறிவுறுத்தியது. இதனை தடுக்க கேரள அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், நிலநடுக்கம் வந்தால் 3.5 ரிக்டேர் அளவு முதல் 4.5 ரிக்டர் அளவு வரை தாங்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 125 ஆண்டுகளாக இப்பகுதியில் பெரிதாக நிலநடுக்கம் வரவில்லை. முல்லைப்பெரியாறு அணையை விட 10 மடங்கு அதிகம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இதுவரை நிலநடுக்க கருவி பொருத்தவில்லை.

    இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்த கேரள பொறியாளர் குழு எந்த அனுமதியுடன் வந்தது. இதை வைத்து அணை மீண்டும் பலவீனம் அடைந்து விட்டதாக கேரளா நாடகமாடும். எனவே அந்த கருவிகளை அகற்ற வேண்டும் என்றார்.

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    • திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர்:

    பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிலோமீட்டர் தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிலோமீட்டர் தொலைவும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே வாயலூர் என்னுமிடத்தில் கலக்கிறது.

    33 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் ஆந்திராவில் 22 இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை சில தடுப்பணைகள் உள்ளன.

    இந்த தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வறண்டு கிடந்த பாலாறு மீண்டும் உயிர்த்தெழுந்து உள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழக எல்லையில் உள்ள குப்பம் தொகுதிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-

    முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியான குப்பத்தில் ஒரு வளர்ச்சி பணிகள் கூட நடைபெறவில்லை. ஹந்திரி நீ வா குடிநீர் கால்வாய் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்.

    யாமி கானி பல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டப்படும்.

    குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்க பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.

    இதன் மூலம் பாலாற்றில் உள்ள 22 தடுப்பணைகளில் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய தடுப்பணைகளும் வர வாய்ப்புள்ளது என ஆந்திர மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

    இந்த பணிகளால் தமிழகத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி விடும் என வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை உயரம் அதிகரிக்க செய்யும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×