search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்து மனு அளித்த விவசாயிகள்
    X

    அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்து மனு அளித்த விவசாயிகள்

    • காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    திருச்சி:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார்.

    பின்னர் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுத்தார். அதைத்தொடர்ந்து இன்று அரியலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்திரம் பஸ் நிலையம் வழியாக புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது கடந்த 30 நாட்களாக சத்திரம் அண்ணா சிலை அருகாமையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மோடி அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் கடனுக்காக வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. மேலும் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

    தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    Next Story
    ×