search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்த ஆண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    இந்த ஆண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

    • 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
    • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு, முல்லைக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதும் தமிழக பகுதிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கேரளாவுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியார், உப்புத்துறை, சப்பாத்து ஆகிய முல்லைப்பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7405 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியான பின்பு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அதற்கு மேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்ட பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    தற்போது தொடர்மழை நீடித்து வருவதால் 6-வது முறையாக 142 அடியை எட்டுமா என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் டிசம்பர் மாதத்தில் 142 அடியாக நிலைநிறுத்தலாம் என்று ரூல் கர்வ் நடைமுறை தெரிவித்துள்ளது. ஆனால் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டிய போதே இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் இருந்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்படும் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே மக்களை பீதியடைய செய்யும் வகையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×