search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடியில் புதிய தடுப்பணைகள்- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கலக்கம்
    X

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடியில் புதிய தடுப்பணைகள்- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கலக்கம்

    • திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர்:

    பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிலோமீட்டர் தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிலோமீட்டர் தொலைவும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே வாயலூர் என்னுமிடத்தில் கலக்கிறது.

    33 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் ஆந்திராவில் 22 இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை சில தடுப்பணைகள் உள்ளன.

    இந்த தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வறண்டு கிடந்த பாலாறு மீண்டும் உயிர்த்தெழுந்து உள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழக எல்லையில் உள்ள குப்பம் தொகுதிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-

    முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியான குப்பத்தில் ஒரு வளர்ச்சி பணிகள் கூட நடைபெறவில்லை. ஹந்திரி நீ வா குடிநீர் கால்வாய் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்.

    யாமி கானி பல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டப்படும்.

    குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்க பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.

    இதன் மூலம் பாலாற்றில் உள்ள 22 தடுப்பணைகளில் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய தடுப்பணைகளும் வர வாய்ப்புள்ளது என ஆந்திர மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

    இந்த பணிகளால் தமிழகத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி விடும் என வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை உயரம் அதிகரிக்க செய்யும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×