search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜகாத் பெற தகுதியானவர்கள்"

    • தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
    • ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

    இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.

    ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)

    ஜகாத் கடமை?

    தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

    தங்கம்-வெள்ளி

    நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

    விளைபொருட்கள்

    சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.

    கால்நடைகள்

    கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

    ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்

    இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

    இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

    ஜகாத் பெற தகுதியானவர்கள்

    இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு

    6) கடனாளிகள்

    7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள்

    ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

    எச்சரிக்கை

    கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)

    மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

    பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

    ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.

    ×