search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு திட்டம்"

    • இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும்.
    • திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    திருப்பூர் :

    இந்திய அஞ்சல் துறை சார்பில் மகளிர் மேன்மை சேமிப்புபத்திரம்-2023 என்ற திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தை பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் நலன் காக்க சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
    • அரசு சாரா ஊழியர்கள் ஓய்வு பெறும்போது விருப்ப பணப்பட்டுவாடா மீதான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயருகிறது.

    சென்னை:

    புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ந் தேதியையொட்டி இன்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

    தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது இன்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    தபால் அலுவலகத்தில் இன்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இன்று முதல் பான் கார்டு முடக்கப்படும். மேலும் அவர்களுக்கு வரி பிடித்தமானது (டி.டி.எஸ்.) அதிகபட்ச அளவான 20 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை கடந்த 313 நாட்களாக உயராமல் உள்ளது. அடுத்த நிதி ஆண்டு இன்று தொடங்கி உள்ள நிலையில் புதிய நிதி ஆண்டில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது.

    அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை இன்று முதல் 12.12 சதவீதம் உயருகிறது. வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கிறது.

    அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அரிய மருந்துகளின் விலை குறைகிறது.

    மத்திய அரசு ஊழியராக இருப்பவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாமா? பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை அவகாசம் உள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.217 சம்பளம் வழங்கப்படுகிறது. இது ரூ.229 ஆக உயருகிறது.

    வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டு சம்பளம் ரூ.7 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கிறது.

    ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான சம்பளத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரைக்கும் 10 சதவீதம் வரி, ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரைக்கும் 15 சதவீதம் வரி. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரைக்கும் 20 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்துக்கும் மேல் உள்ள வர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

    வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது. ஸ்டேட் வங்கி புதிய வட்டி 7.90 சதவீதம் முதல் தொடங்குகிறது. எச்.டி.எப்.சி. வங்கி வட்டி 8.30 சதவீதம் முதல் தொடங்குகிறது. மற்ற வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன.

    மாசு இல்லாத பி.எஸ்.-6 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதால் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை உயரும்.

    நிறுவனங்கள் இன்று முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிக்க பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

    அரசு சாரா ஊழியர்கள் ஓய்வு பெறும்போது விருப்ப பணப்பட்டுவாடா மீதான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயருகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மூலம் கிடைக்கும் இரண்டு பிரீமியமான ரூ.5 லட்சத்துக்கு வரி விதிக்கப்படும்.

    மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    • மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது.
    • முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    உடுமலை :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தளி பேரூராட்சிக்குட்பட்ட குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது. ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை மற்றும் தளி பேரூராட்சி சார்பில் இந்த முகாம் நடந்தது. அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் .

    இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, பேரூராட்சி தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் செல்வன் பிரியா, நர்சிங் கல்லூரி முதல்வர் தவசிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் மலர்வழி ஒருங்கிணைத்தார். முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    • தபால்துறை சார்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் செயபடுத்தப்படுகிறது.
    • இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

    சேலம்:

    தபால் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி சேலம் மேற்கு கோட்டம் சார்பில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தபால்காரர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

    அதே போன்று 50 வயது முடிந்த பாதுகாப்பு பணியாளர்கள், 55 வயது முடிவடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.1,000-ம் முதல் அதிக பட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மேற்கு கோட்ட தபால் கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    • சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமர்நிஷா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி, விக்னேஷ் அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் தற்போது குடியிருந்து வந்த முருகேசன், அவரது மனைவி மீனா ஆகியோர் மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகில், நேதாஜி ரோட்டில் ''ஐஸ்வர்யா தங்க மாளிகை'' என்ற பெயரில் பல்வேறு நகை சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தருவதாக ஆசை காட்டினர்.

    மேலும் 2 மாதத்திற்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு (வவுச்சர்) பெற்றுக்கொண்டு பணமாகவோ, நகையாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் நம்பகமான ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து பணத்தை முதலீடு செய்ய வைத்து, முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜராகி புகார் மனு கொடுத்தனர்.

    அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே ஐஸ்வர்யா தங்க நகை மாளிகை என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்க ளுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, எண். 4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×