search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிமலை கோவில்"

    • கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.

    வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது கந்தசஷ்டி விரதமாகும்.

    ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கர்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி லட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    எல்லா முருகன் ஆலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நிறைந்த பக்தியான விரதமாக செய்ய பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்படும்.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்தி சிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறி தவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலைநாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெருபேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    சஷ்டி விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது).

    உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.

    விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும்.

    உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதிமையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும்.

    மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூஜைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

    உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

    சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியானபோது சாப்பிடலாம்.

    ஒரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைபிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும், உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுஷ்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச்சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி.

    தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும். ஆலயங்களில் ஆரம்ப தினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் காப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

    ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் பூஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

    இவ்விதம் கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுஷ்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தால் உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின்போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன.

    கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுறுப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

    உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

    கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன.

    மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூரும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே

    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

    மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே

    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்

    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

    முருகனின் ஆறு படை வீடுகள்

    பழனி:

    பழனி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழனி. பழனி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

    திருச்செந்ததூர்:

    கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின்போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

    சுவாமிமலை:

    தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

    திருத்தணி:

    முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை:

    நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

    • சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
    • அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    திருப்பரங்குன்றம்:

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்:

    அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி:

    ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை:

    தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி:

    சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை:

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    ×