search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி கோவில்"

    • திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர்.
    • பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் குறைந்த விலையில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தணிகை, கார்த்திகேயன் மற்றும் சரவணப்பொய்கை குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கே.ஜி.எப்., பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். முன்னதாக கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர். ஆனால் கோவில் ஊழியர்கள் அறைகள் காலியாக இருந்தும் அறைகள் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அறைகள் ஒதுக்க முடியாது என கோவில் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தணிகை குடில்களில் அறைகள் காலியாக இருந்தும் வெளி மாநிலத்தவருக்கு அறை ஒதுக்க முடியாது என கூறி 3 மணி நேரம் குழந்தைகள் மற்றும் பெண்களை தரையில் அமர வைத்த கோவில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில பக்தர்கள் திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோவில் உயர் அதிகாரிகள் உடனடியாக பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கி உள்ளனர்.

    குடில்களில் பணிபுரியும் ஊழியர்கள் முகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்களில் அறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமி நாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    தந்தையாகிய சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் 'குரு உபதேச தலம்' என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி ஆகியோர் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது.
    • சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கோவில் வளாகத்தில் ஆடிக் கிருத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை நினைவு மண்டபம், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் தணிகை இல்ல வளாகத்தில் புதிய குடில் கட்டுதல், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் 3 நிழல் மண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, தணிகை இல்ல வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குடில்களையும், விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தையும் திறந்து வைத்து, மலைக்கோவிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ள பேட்டரி கார்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தெக்களூர் நீரேற்று நிலையத்தில் 500 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள், திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் கோவிலின் உபகோவிலான சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், வேலூர் மண்டல இணை ஆணையர் ரமணி, திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு போறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்துமுருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும். அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.

    • கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.

    வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது கந்தசஷ்டி விரதமாகும்.

    ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கர்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி லட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    எல்லா முருகன் ஆலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நிறைந்த பக்தியான விரதமாக செய்ய பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்படும்.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்தி சிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறி தவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலைநாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெருபேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    சஷ்டி விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது).

    உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.

    விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும்.

    உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதிமையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும்.

    மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூஜைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

    உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

    சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியானபோது சாப்பிடலாம்.

    ஒரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைபிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும், உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுஷ்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச்சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி.

    தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும். ஆலயங்களில் ஆரம்ப தினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் காப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

    ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் பூஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

    இவ்விதம் கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுஷ்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தால் உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின்போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன.

    கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுறுப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

    உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

    கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன.

    மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூரும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே

    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

    மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே

    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்

    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

    முருகனின் ஆறு படை வீடுகள்

    பழனி:

    பழனி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழனி. பழனி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

    திருச்செந்ததூர்:

    கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின்போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

    சுவாமிமலை:

    தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

    திருத்தணி:

    முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை:

    நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

    • சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
    • அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    திருப்பரங்குன்றம்:

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்:

    அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி:

    ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை:

    தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி:

    சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை:

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி-தெய்வானை சமேதராய் எழுந்தருளி காட்சி தருகிறார்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை, மாசித்திருவிழா மற்றும் கிருத்திகை என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் திருத்தணி கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவு முதலே சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி தரிசனம் செய்தார்கள். மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதேபோல் வெளி பிரகாரத்தில் உள்ள உற்சவர் சன்னதியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பலர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அலகு குத்தி காவடி எடுத்து மாடவீதி வலம் வந்தனர். இதனால் கோவில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
    • சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகப் பெருமானின் 5-ம் படை வீடாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இங்கு தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள் வைத்திருக்கும் பழம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதும், பல நேரங்களில் பக்தர்களை கடித்த சம்பவமும் நடந்து உள்ளது.

    இதனால் திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் சுற்றித் திரிந்த சில குரங்குகள் பிடிக்கப்பட்டன. ஆனாலும் அதன் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. குரங்குகளின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே மீண்டும் அதிகரித்து விட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சுமார் 50 குரங்குகள் கூட்டமாக கோவிலுக்குள் புகுந்தன. குரங்குகள் பக்தர்களை மிரட்டியபடி அட்டகாசம் செய்தன. இதனால் பக்தர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    அப்போது சில குரங்குகள் மூலவர் சன்னிதானம் செல்லும் வழி வரை சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடுதல் கோவில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட தொடங்கினார். ஆனால் குரங்குகள் அங்கும், இங்கும் தாவி ஊழியர்களுக்கு போக்கு காட்டியது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன. இதன் பின்னரே கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர்.

    குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம், அபிஷேகம் ஆகியவை சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருத்தணி மலைக்கோவில் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
    • வெள்ளி 8862 கிலோ காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தேவர் மண்டபத்தில் கோவில் பணியாளர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 19 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரம், தங்கம் 555 கிராமும், வெள்ளி 8862 கிலோவும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.

    திருத்தணி:

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக சுவாமிநாதன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆர்.டி.ஓ.ஹஸ்ரத்பேகம், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் வெண்ணிலா, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு, சுகாதாரத்துறை, மின்சார துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் தங்க கோபுரம், கோவிலில் உள்ள அறைகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜெனரேட்டர் அறை, கோவிலில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், மலை மேல் உள்ள கடைகள், கோவில் தங்கத்தேர், வெள்ளி தேர் உள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    • திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், மற்றும் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 27 நாட்களில் ரூ.89 லட்சத்து 3 ஆயிரத்து 193 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×