search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பராமரிப்பு"

    சாலைகளை பராமரிக்க அதிகபட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 3932.13 கி.மீ நீளமுடைய 23,221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும், 1270.83 கி.மீ நீளமுடைய 11,039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சி சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காகவும் சாலைகள் அவ்வப்போது பல இடங்களில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், உட்புற சாலைகளில் வேகத்தடை அமைப்பது, மங்கிபோன தெர்மோ பிளாஸ்டிக் கோடுகள் புதுப்பித்தல், வழிகாட்டு பலகைகள் அமைப்பது போன்ற போக்குவரத்து அபிவிருத்தி பணிகள் தேவைக்கேற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டியநிலை உள்ளது.

    சென்னை மாநகராட்சி

    அதுமட்டுமன்றி, மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பெரும் பள்ளங்களும் ஏற்படுகிறது. இதனை பராமரிக்க அல்லது புதுப்பிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒப்பந்ததாரர்கள் நியமித்து ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது தேவைக்கேற்ப பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி 2021-2022-ம் ஆண்டிற்காக மொத்தம் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உட்புற சாலைகளை ஒட்டும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 6 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மேலும் 9 சாலைகள் மைய தடுப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #TamilnaduHighWays #MinisterJayakumar
    சென்னை:

    மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2012-2013-ம் ஆண்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி. எம்.சி.) என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுதுபார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், அவசரகால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்பு சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;

    மேலும், சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லைக் கற்கள் அமைத்தல், விபத்துகளை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியீடுகளை அமைத்தல்,

    சாலை ஓரப்புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத்தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

    மழைக்காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன.

    எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டு இருப்பதுடன் பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அந்தச் செய்தியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 5 கோட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு பதிலாக ரூ.2,083 கோடி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நடை முறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு என்பது தவறான தகவல் ஆகும்.

    அனைத்து பணிகளையும் உள்ளடக்கிய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூறு மதிப்பீட்டை மட்டும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) மூலம் பணியை மேற்கொள்ளாமல் தனித்தனியாக திட்டப் பணிகள் மூலம் சாலைகளை மேம்படுத்தி இருந்தால் ரூ.278 கோடி நிதி தேவைப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பி.பி.எம்.சி. மூலம் ரூ.55.46 கோடியை அரசு சேமித்துள்ளது.

    அந்த வகையில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருது நகர் கோட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilnaduHighWays #MinisterJayakumar
    ×