search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    • கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த ஜமேஷாபின் என்பவன் இறந்தான். போலீசாரின் விசாரணையில் ஜமேஷா முபின் பயங்கராவதி என்பதும், கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்தும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்ததுடன், அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கர்நாடகாவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஷாரிக் என்ற பயங்கரவாதி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினும், ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும் ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    இதுதவிர மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பியதும் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு, நவம்பர் 19-ந் தேதி மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக கூறப்பட்டிருந்தது.

    மேலும் தமிழ்நாடு கோவை, கர்நாடகா மங்களூவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

    இந்த 2 சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து, கோவையில் மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக கோவையில் யாராவது இருக்கின்றனரா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக சிறப்பு அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விசாரிக்கிறோம். இது தொடர்பாக என்.ஐ.ஏ.வுடனும் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம்.

    மேலும் கோவையில் ஐ.எஸ். இயக்கத்துடன் யாராவது தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கிறோம்.

    தற்போது கோவையில் சந்தேகத்திற்கிடமாக உள்ள 200 பேர் பட்டியல் தயாரித்து, அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    அவர்களின் செல்போன் அழைப்புகளும் பார்த்து வருகிறோம். அவர்கள் யார் யாருடன் பேசி உள்ளனர். அதில் யாராவது சந்தேகப்படும் படியாக உள்ளனரா என்பதை அறிய அவர்களின் அழைப்பு விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகிறோம்.

    இதுதவிர அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம். அதில் அவர்கள் ஏதாவது கருத்துக்கள் பதிவிட்டுள்ளனரா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.

    இந்த பணியில் மாநகர உளவு போலீசார், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளோம். அவரது தலைமையில் இந்த குழுவினர் தங்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்த ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

    பெங்களூரு:

    தமிழ்நாடு கோவையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 23-ந்தேதி இரவு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் காரில் உடல் கருகி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் அதாவது நவம்பர் மாதம் 19-ந்தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில், இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றியும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினும், மங்களூரு பயங்கரவாதி ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.

    ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவி, நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும், கேரளாவில் தங்கி இருந்து பார்சல் மூலம் வெடிபொருட்களை வாங்கியதும், அவருக்கு மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்பட்டதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், அக்டோபர் மாதம் 23-ந்தேதி கோவையில் நடந்த கார் வெடிப்பு, நவம்பர் மாதம் 19-ந்தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் 'தமிழ்நாடு கோவை, கர்நாடகத்தின் மங்களூருவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். பா.ஜனதா மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராக எங்களுக்கு விரோதம் உள்ளது. அவர்களுக்கு எதிராக தென்னிந்தியாவில் எங்களின் முஜாகிதீன்கள் போரை நிகழ்த்தினர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பலமுறை சோதனை செய்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

    அவர்களை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • திருநெல்வேலியின் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சுமார் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    அதன்படி, சென்னை, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

    அதேபோல், திருநெல்வேலியின் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். போலீசாரின் விசாரணையில், ஜமேஷா முபின் கோவையில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டதும், அதில் சிக்கி அவரே இறந்ததும் தெரியவந்தது.

    மேலும் இதுபோன்று கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட தகவலும் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து கோவை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்து வந்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அவர்களின் வீடு, அவர்கள் சந்தித்துக்கொண்ட இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இந்த நிலையில் முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவுபிக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதிபதி 7 பேரையும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேரையும் நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நள்ளிரவு முதல் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது முபின் குறித்தும், இவர்கள் வேறு எங்கு எல்லாம் இதுபோன்ற செயலை அரங்கேற்ற திட்டம் தீட்டினர், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? முபின் உங்களிடம் கூறிய தகவல் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்களை வீடுகள் மற்றும் அவர்கள் சந்தித்து பேசிய இடங்களுக்கும் நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் இவர்கள் கூட்டம் நடத்தியதாக கூறப்படும் சத்தியமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்களை அனைத்தையும் ஆவணங்களாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், வீடுகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், போலீசார் விசாரணையின்போது கொடுத்த ஆவணங்கள், முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களையும் ஆதாரமாக சேர்த்து குற்றபத்திரிகையினை தயாரித்து வருகின்றனர்.

    விரைவில் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றப்பத்திரிகையை தயாரித்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
    • பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.

    இவரிடம் டெல்லியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகாநதி கொத்துவா பள்ளிவாசல் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவரது நண்பர்களான ஜியாவுல் ஹக், சதாம், ஹபீப் ரகுமான் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை முகமது கைசர், சதாம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர். இன்று 3வது நாளாக முகமது கைசரை விசாரணைக்கு பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவருடன் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மேலும் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழனியில் தொடர்ந்து 3வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
    • முபின் வீட்டில் சந்தேகித்திற்கிடமான பொருட்கள் இருந்துள்ளது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

    இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கினை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக சென்னையில் வைத்து விசாரித்து வந்தனர்.

    நேற்று அவர்கள் 6 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் 6 பேரில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தவுபிக் ஆகிய 4 பேரை மட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது முபின் வீட்டில் சந்தேகித்திற்கிடமான பொருட்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த அதிகாரிகள் அது தொடர்பாகவும் 4 பேரிடமும் விசாரித்தனர்.

    தொடர்ந்து 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி.எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த காட்சிகள் அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

    • 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
    • ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின், சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கிய சத்தியமங்கலம் காடுகளில் ரகசிய கூட்டங்கள் நடத்தியதும், இதில் தீவிரவாதத்திற்கு ஆட்கள் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    இதில் முகமது தல்கா, சேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    அதன்படி முகமது தல்கா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் 17-ந் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் யார்? யார் எல்லாம் பங்கேற்றனர். அவர்களின் பின்னணி என்ன? ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தது யார்? எனவும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த ரகசிய கூட்டத்தில் அவர்கள் என்ன திட்டம் திட்டினார்கள். வேறு எங்காவது இதுபோன்ற செயல்களை அரங்கேற்றுவது குறித்து பேசப்பட்டதா? முபின் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கினார்.

    ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கூட்டத்தில், வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது கலந்து கொண்டவர்களா? அவர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    தொடர்ந்து காவலில் எடுத்த 6 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதவிர அவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய சத்தியமங்கலம் காடுகளுக்கும் 6 பேரை அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் கோவைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடக்கும் என தெரிகிறது.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த கூட்டத்தில் பலர் பங்கேற்று இருப்பதால் இவர்கள் 6 பேரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 பேரையும் நேரில் அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் உமர்பாரூக் உள்பட 5 பேரையும் குன்னூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முகமது அசாரூதின், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 பேரையும் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக 5 பேரையும் அன்புநகர் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக முபின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீட்டில் அடிக்கடி சந்தித்து கூட்டங்களை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உமர்பாரூக் உள்பட 5 பேரையும் குன்னூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
    • குண்டு வெடிப்புக்கு முன்பாக அவர்கள் நின்று பேசிய இடங்கள், கூட்டம் நடத்திய இடங்கள் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு எல்லாம் நேரில் அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெராஸ்கான் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான 9 பேரில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.மேலும் அவர்களை 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் சென்னை புழல் ஜெயிலில் இருந்து காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் 5 பேரையும் கோவைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

    அதன்படி நேற்றிரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள், காவலில் எடுத்த முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 5 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.

    இன்று காலை 5 பேரையும் உக்கடம், ஜி.எம்.நகர், அல்-அமீன் காலனி, புல்லுக்காடு, பிலால் எஸ்டேட், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குண்டு வெடிப்புக்கு முன்பாக அவர்கள் நின்று பேசிய இடங்கள், கூட்டம் நடத்திய இடங்கள் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு எல்லாம் நேரில் அழைத்து சென்று விசாரித்தனர்.

    குண்டு வெடிப்பு சம்பந்தமாக என்னென்ன பேசினீர்கள், அதில் யார் எல்லாம் இருந்தீர்கள், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    முபின் மற்றும் அவனது கூட்டாளிகள் குண்டு வெடிப்புக்கு முன்பாக அடிக்கடி சந்தித்து கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். அந்த இடங்களுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
    • கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    பூந்தமல்லி:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார்.

    இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று 6 பேரையும் கோவை சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர்.

    இன்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    • புழல் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கடந்த வாரம் கைதான தவ்பீக் உள்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருவதால் இவர்கள் அடிக்கடி சென்னை அழைத்து வரப்பட்டு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். கோவையில் இவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது முடிந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜமேஷா முபின் கூட்டாளிகள் அசாருதீன், அப்சர்கான் உள்பட 6 பேரையும் நேற்று காலை 11 மணிக்கு வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர். இதற்கான நடவடிக்கையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர். இனி புழல் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த வாரம் கைதான தவ்பீக் உள்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜமேஷா முபின் கூட்டாளிகள் மொத்தம் 9 பேர் புழல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×