search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார் குண்டு வெடிப்பு வழக்கு- காவலில் எடுத்த 6 பேரை சத்தியமங்கலம் அழைத்து சென்று விசாரிக்க முடிவு
    X

    கார் குண்டு வெடிப்பு வழக்கு- காவலில் எடுத்த 6 பேரை சத்தியமங்கலம் அழைத்து சென்று விசாரிக்க முடிவு

    • 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
    • ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின், சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கிய சத்தியமங்கலம் காடுகளில் ரகசிய கூட்டங்கள் நடத்தியதும், இதில் தீவிரவாதத்திற்கு ஆட்கள் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    இதில் முகமது தல்கா, சேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    அதன்படி முகமது தல்கா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் 17-ந் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் யார்? யார் எல்லாம் பங்கேற்றனர். அவர்களின் பின்னணி என்ன? ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தது யார்? எனவும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த ரகசிய கூட்டத்தில் அவர்கள் என்ன திட்டம் திட்டினார்கள். வேறு எங்காவது இதுபோன்ற செயல்களை அரங்கேற்றுவது குறித்து பேசப்பட்டதா? முபின் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கினார்.

    ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கூட்டத்தில், வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது கலந்து கொண்டவர்களா? அவர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    தொடர்ந்து காவலில் எடுத்த 6 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதவிர அவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய சத்தியமங்கலம் காடுகளுக்கும் 6 பேரை அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் கோவைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடக்கும் என தெரிகிறது.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த கூட்டத்தில் பலர் பங்கேற்று இருப்பதால் இவர்கள் 6 பேரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×