search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் நிலம்"

    • நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது.
    • கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கருப்பராயன் கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இதன் அருகில் கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ஊர் கட்டுப்பாடு குத்தகை அடிப்படையில் கிராம மக்களில் சிலர் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கருப்பராயன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பிறகும் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் கடந்த வருடத்தில் கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் கோவில் நிலத்தை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகளும் தோண்டப்பட்டது.அதன்பின்னர் கடந்த ஒரு வருடமாக யாரும் இங்கு எட்டிப் பார்ப்பதில்லை. இந்த நிலையில் கம்பி வேலிகள் பழுதடைந்து விழுந்ததால், அந்த கோவில் நிலத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. கோவில் நிலம் குடிமகன்களின் பாராக மாறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதனைப் பார்த்து எங்களுக்கு வேதனையாக உள்ளது. தற்பொழுது இந்த கோவில் நிலம் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, அல்லது காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டும் எந்தத் தகவலும் இல்லாததால், தகவல் உரிமைச் சட்டத்தில் கூட கேட்டுள்ளோம். ஆனால் அதிலும் முறையான தகவல்கள் இல்லை. கண்ணெதிரே கோவில் நிலம் சீரழிவதை கண்டு வேதனையாக உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.

    • கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.
    • கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் ராஜசேகரன் தலைமையில் சேடபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகராட்சி 2 வது வார்டு சேடபாளையத்தில் பிள்ளையார், மாரியம்மன், மாகாளியம்மன், சென்னியாண்டவர் கோயில்கள் உள்ளன. இவை சுமார் 200 ஆண்டுகள் பழமையானவையாகும். தற்போது இந்த கோயில்கள் சிதிலமடைந்த காரணத்தினால் புதிய கோயில் கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளோம். நாரணாபுரம் கிராமம் நத்தம் சர்வே எண் 687 சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் மைதானத்தை சுத்தம் செய்து புதிய கோயில் கட்டட பணிகளை தொடங்க உள்ளோம். கோயில் நிலத்திற்கு அருகில் உள்ள தனிநபர் ஒருவர் கோயிலுக்கு சொந்தமான இடத்தையும், பொது கிணற்றையும் ஆக்கிரமித்து அதில் மதில் சுவர் மற்றும் குடியிருப்புகள் கட்டியுள்ளார். கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும். மேலும் அதே பகுதியில் நத்தம் சர்வே எண் 148 சாலையில் நீரோடையினை முழுமையாக ஆக்கிரமித்து குடியிருப்புகளுக்கு கழிவறைகள் அமைத்துள்ளார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். அந்த இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.

    ×