search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் இடிப்பு"

    • கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
    • ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, மேற்கு அம்பேத்கர் வீதியில் 75 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனி அமுதன், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு எஸ்.பி. ஜவகரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு தாட்கோ காலனியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்தன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தினமும் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

    இந்த கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அத்துடன் இங்கு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மோதிக் கொள்ளும் சூழலும் உருவானது. இதையடுத்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கோவிலில் யாரும் எந்தவிதமான பிரச்சினையும் செய்யக்கூடாது, கோவிலுக்கு வழிபாடு நடத்த வருகை தருபவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது என்று உறுதியேற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதுதொடர்பாக தீர்மானமும் போட்டு அதில் பிரச்சினைக்கு காரணமான இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ஒரு சில நபர்கள் சந்தன காளியம்மன் கோவிலை கடப்பாறை, இரும்புக்கம்பிகள் உதவியுடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனகன் ராஜா, அவரது உதவியாளர் மற்றும் சிலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கோவிலை இடித்துக்கொண்டிருந்த நபர்களை தடுத்து எச்சரித்ததோடு கண்டித்தும் அனுப்பினார். ஆனால் அவர்கள் கோவிலின் பெரும்பாலான பகுதியை இடித்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினையில் கோவில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை
    • ஆக்கிரமிப்புகளை அகற்றினர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் ஆரணி செய்யார் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர்.

    எஸ்.வி.நகரம் பஸ் நிறுத்தம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.

    பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
    • பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டுமானங்களை இடித்து அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிணறுகளின் மீது கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கோவில் கட்டுமானம் இடிக்கப்பட்டதாகவும், இதுவரை நான்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தூர் கலெக்டர் இளையராஜா தெரிவித்தார்.

    • கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.
    • சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார்.

    வண்டலூர்:

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு திருநங்கைகள் சிலர் காளி கோவில் அமைத்து சில வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த கோவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அரசு அதிகாரிகள் அதை அகற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த திருநங்கைகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.

    சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார். அவர் காளியம்மன், நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சாமி சிலைகள் மீது திடீரென்று மிளகாய் பொடி கலந்த நீரால் அபிஷேகம் செய்தார். கோவிலை இடிக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சாமியாரிடம் ஆவேசமாக வேண்டினார்.

    அதன்பிறகு அவர் மிளகாய் பொடி கலந்த தண்ணீரை தனது முகத்தின் மீது ஊற்றிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்டநேர ஆலோசனைக்கு பிறகு கோவிலின் மேற்கூரையை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    • வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
    • சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

    • ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர்.
    • அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு 1,054 ஏக்கர் நிலமும், மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானமும் வருகிறது. அதை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. 1967ல் நெம்மேலி கடற்கரை பகுதியில் அவருக்கு கட்டப்பட்ட கோவில் மண்டபம் பழுதடைந்து விழும் நிலையில் இருந்தது.

    ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர். இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    இதை அடுத்து அரசு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் பாறை கற்களால் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. பழைய கோவிலை இடித்து புதிய கோவில் கட்டுவதற்காக பழைய கோவிலை இடிக்கும் பணியை இந்து அறநிலையத்துறை துவங்கியது.

    • சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது.
    • வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை சாலை விரிவாக்கப்பணிக்கு இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று கோவிலை அகற்ற அதிகாரிகள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோவிலுக்கான மாற்று இடத்தை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தருவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கோவிலை நாளை(இன்று) அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் கோவிலை இடிக்காமல் அதிகாரிகள் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் பவானி அம்மன் கோவிலை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர்.

    இதுபற்றி அறிந்ததம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருச்சி அருகே புதிய கோவில் கட்டுமான பணிக்காக சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இடிக்கப்பட்டது
    • ஒவ்வொரு முறையும் புதிதாக ரோடு போடும் போது ரோட்டின் மட்டம் உயர்ந்ததால் தற்போது கோவிலில் 5 படிக்கட்டுகளும் பூமிக்கு அடியில் சென்று விட்டன


    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த அல்லித்துறை அருகே உள்ள சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாகணபதி, ராஜகாளியம்மன் கோவில் புங்கனூர்-அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ளது.

    இந்தக் கோவில்களை தற்போது இடித்துவிட்டு புதிய கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து அப்பகுதியில் உள்ள 80 வயது தக்க பெரியவர் ஒருவர் கூறுகையில், இந்த கோவிலானது தனக்கு விவரம் தெரிந்த காலத்தில் 5 படிகள் வைத்து மிக உயரமாக இருந்தது. அதற்கு முன்பு எத்தனை படிகளுடன் எவ்வளவு உயரமாக இருந்தது என்று யாருக்கும் தெரியாது.

    ஆனால் தற்போது இந்த கோவில் புங்கனூர்-அல்லித்துறை மெயின் ரோட்டின் ஓரத்தில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் புதிதாக ரோடு போடும் போது ரோட்டின் மட்டம் உயர்ந்ததால் தற்போது கோவிலில் 5 படிக்கட்டுகளும் பூமிக்கு அடியில் சென்று விட்டன. மேலும் உள்ளே இருந்த விநாயகர் சிலை இருக்கும் கற்பகிரகம் சுரங்கம் போல் காட்சியளிக்கிறது.

    எனவே சாந்தாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக புதிய கோவில் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.

    எங்கள் பாட்டன், முப்பாட்டன் கட்டிய கோவிலை இடித்தது வருத்தமாக இருக்கிறது. விரைவில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று கூறினார்.




    ×