search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேம்"

    • மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.

    பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

    கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழு சார்பில், அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை, முகூர்த்தக்கால் பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து வேத உபசாரங்கள், திருமுறை பாடப்பட்டு கலசங்கள், முகூர்த்தக்கால்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பாரவேல் மண்டபத்தில் இருந்து உட்பிரகாரம் வந்து நவவீரர் சன்னதி முன்பு ஒரு முகூர்த்தக்காலும், யாகசாலை பூஜைக்காக கார்த்திகை மண்டபத்தில் உள்ள ஈசான மூலையில் மற்றொரு முகூர்த்தக்காலும் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு முகூர்த்தக்கால்களை நட்டனர்.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். அதையடுத்து முகூர்த்தக்கால்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் ராஜகோபுர கலசத்துக்கு ரூ.22 லட்சத்தில் தங்க 'ரேக்' ஒட்டும் பணி மற்றும் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் கோவில் நீராழிபத்தி மண்டபத்தை சுற்றிய பகுதி, மகா மண்டப பகுதி, தங்க விமானத்தை சுற்றிய பகுதிகளில் பித்தளையால் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஜனவரி 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 26-ந்தேதி பழனி கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை கோவில் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • 80 சதவீத கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • கோவில் ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாலாய பணிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் திருப்பணிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், சேதமடைந்த சிற்பங்கள், சன்னதிகளின் விமானம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

    கோவில்ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(25-ந்தேதி) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்திற்கு ஒருமாதமே உள்ளதாலும், அதனைதொடர்ந்து தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளதாலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்துவர தொடங்கி உள்ளனர். கடும் பனி நிலவி வரும் போதிலும் இரவு பகலாக பக்தர்கள் அதிகளவில் பழனியை நோக்கி நடந்து செல்கின்றனர்.

    • 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இதற்கிடையே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.

    கோபுரங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்தது. தற்போது கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணி முடிவு பெற்றுள்ளன. இந்தநிலையில் தங்க கோபுரத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகள் முடிவு பெற்றவுடன், அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேற்கூரை ஓடுகளில் படிந்திருந்த பாசிகள் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம்
    • குடிநீர், கழிப்பறை, சாலை வசதி செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டு தீர்மானம்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில், வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் திருப்ப ணிகள் செய்ய ப்பெற்று 1604-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றதாக கல்வெட்டுகள் கூறுகிறது.

    418 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கோவில் கருவறை, மூலவர் சன்னதி, ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட மண்டபம், கொடிமரம், திருவம்பாடி கிருஷ்ணன் சன்னதி, ஸ்ரீதர்ம சாஸ்தா சன்னதி, மடப்பள்ளி, கோவில் வளாகங்கள் ஆகியவற்றில் விரிவான புனரமைப்புப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்று நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. தொடர்ந்துபரிகார பூஜைகள் நடந்தது.

    41 நாட்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்காக ராம நாம ஜெபம் பூஜை நடந்து முடிந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக விழா பூஜைகள் நாளை(29-ந்தேதி) தொடங்குகிறது.

    நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு ஆச்சரியவரணம், முளையிடல், பிரசாத சுத்தி, அஸ்த்ரகலச பூஜை,

    ராக்‌ஷோக்ன ஹோமம், வாஸ்து கலச ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் அத்தாழ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, மாலை 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை சொற்பொழிவு ஆகியன நடைபெறுகிறது.

    தொடர்ந்து வரும் நாட்கள் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கும்பாபிஷேக நாளான 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபி ஷேகப்பெருவிழா நடைபெறுகிறது.

    நேற்று கோவிலின் முன்புறமான மேற்கு வாசலில் உள்ள பிர மாண்ட நுழைவுவாயில் மேற்கூரை ஓடுகளில் படிந்திருந்த பாசிகள் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    மேலும் கொடிமரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத்தகடுகள் மற்றும் கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட உள்ள கருவாழ்வார் சிலை பொருத்துவதற்கு வசதியாக சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை கூட்டம் திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவில் அன்னதானம் மன்டபத்தில் நடைபெற்றது. திருவட்டார் பேருராட்சி மன்ற தலைவி பெனிலா ரமேஷ், சிதறால் புலவர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் குடிநீர், கழிப்பறை, சாலை வசதி செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் பேரூ ராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தி தர வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.

    பேரூராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷே கத்திற்கு முன் செய்து தரபடும். கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி பேருராட்சி பணியாளர்கள் மூலம் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று பேருராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தெரிவித்தார்.

    • பல்வேறு வேலைகள் முழுவீச்சில் நடந்து பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது
    • சுமார் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் உலோகத்தில் கருடாழ்வார் உருவம் வார்த்தெடுக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    வரும் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்தப்பட வேண்டிய தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மர கவசங்கள் மற்றும் கொடிமரத்தின் உச்சியில் பொருத்தப்பட வேண்டிய கருடாழ்வார் சிலை மணி ஆகியன தயார் நிலையில் உள்ளது.

    418 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஜூலை மாதம் 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கோவிலில் மூலவரின் கடுசர்க்கரை யோக சிலை புதுப்பிக்கும் பணி, மியூரல் ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும்பணி, கோவில் விமானங்கள் சரி செய்யும்பணி, விளக்கணி மாடங்கள் சரிசெய்யும் பண்டு உட்பட பல்வேறு வேலைகள் முழுவீச்சில் நடந்து பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது.

    லட்ச தீப விழாவின் போது கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள தேக்குச்சட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேப்பெண்ணெய் மற்றும் மூலிகை எண்ணைகலந்து தேக்குமரச்சட்டங்களில் நேற்று பூசப்பட்டது.

    2017-ம் ஆண்டு கேரள மாநிலம் கோன்னி வனத்தில் இருந்து 70 அடி நீளமுள்ள தேக்கு மரம் பிரமாண்ட வாகனத்தில் திருவட்டாறுக்கு கொண்டு வரப்பட்டு மூலிகை எண்ணெய்த்தொட்டியில் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொடி மரம் நிறுவப்பட்டது.

    இந்த கொடி மரத்தில் பொருத்துவதற்காக செம்புக்கவசங்கள் தங்கமுலாம் பூசும் பணி சென்னையில் நடந்தது. கொடிமர கவச முலாம் பூசும் பணிகள் மற்றும் கருட வாகனம் ஆகிய பணிகளை மேற்கொண்ட கேரளாவைச்சேர்ந்த சிற்பி பத்தியூர் வினோத் பாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் நான் பல்வேறு கோவில்களில் கொடிமரங்கள் தொடர்பான வேலைகள் செய்துள்ளேன். கன்னியா குமரி மாவட்டத்திலும் பல கோவில்களில் வேலைகள் நடத்தி உள்ளேன். சபரிமலை ஐயப்பசாமி கோவில் கொடிமர பிரதிஷ்டைக்காக அதை வடிவமைத்து கொடுத்துள்ளேன். தற்போது திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தில் பொருத்தப்பட உள்ள செம்புக்கவசங்களில் தங்கமுலாம் பூசும்பணி முடிவடைந்து விட்டது. கொடி மரத்தின் உச்சியில் உள்ள சம்மணமிட்டு உட்காந்த நிலையில் உள்ள கருடாழ்வார் சிலை பொருத்தப்பட உள்ளது. இதற்காக சுமார் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் உலோகத்தில் கருடாழ்வார் உருவம் வார்த்தெடுக்கப்பட்டது. தற்போது அதன்மீது தங்கமுலாம் பூசும் பணி முடிவடைது விட்டது மட்டுமல்லாமல் கருடாழ் வாருடன் சுமார் அரைக்கிலோ எடையில் ஐம்பொன்னில் வார்த்தெடுக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட இரு மணிகளும் பொருத்தப்பட உள்ளன. இதற்கான வேலைகள் அறநிலையத்துறையின் உத்தரவின் படி விரைவில் துவங்கும்" என்றார்.

    நேற்று கோவிலில் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராம் சாமி தரிசனம் செய்தார்.

    நேற்று கும்பாபிஷேகத்துக்காக கோவில் விமானம் மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபத்தின் உச்சியில் சாரம் அமைக்கும்பணிகள் நடந்தது.

    இன்று மாலை கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி அமைப்புகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 28.ம்தேதி முதல் செயல்படத்துவங்கும்.

    தற்போது கோவிலில் நான்கு பிரகாரங்களிலும் நான்கு டி.எஸ்.பி.யின் கண்காணிப்பில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பார்கள். பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோயிலை சுற்றி உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும்
    • திருவட்டார் பேரூராட்சி சார்பாக கோவில் படித்துறையை ரூ.17 லட்சம் செலவில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் |கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 6-ந்தேதி நடைபெற இருக்கிறது இதையொட்டி கோயிலை சுற்றி உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பக்தர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை உடனே செப்பனிடப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

    திருவட்டார் பேரூராட்சி சார்பாக கோவில் படித்துறையை ரூ.17 லட்சம் செலவில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள பகுதியில் வண்ணக் கற்கள் பதிக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி பொறியாளர் ஷெரிப் முகமது, இளநிலை பொறியாளர் ஜெசி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், பொறியாளர் ராஜ்குமார், திருவட்டார் கோவில் மேலாளர் மோகன்குமார் திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், பேரூ ராட்சி தலைவர் பென்னிலா ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் சாலை அமைக்கும் வேலை தொடர்பாக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கார் பார்க்கிங் குடிநீர் வசதி கழிப்பிட வசதி அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டியவை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    • சோழவந்தான் அருகே மதுரை வீரன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆதீனம், கிராமமக்கள் பங்கேற்றனர்.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள பால கிருஷ்ணாபுரத்தில் வடகாட்டு பகுதியில் உள்ள மொம்மியம்மன், வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    முத்திருளாண்டி பங்காளி களுக்கு பாத்தியப்பட்ட, மதுரைவீரன் சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் அஷ்ட லட்சுமி பூஜை, பரிகார தெய்வங்களுக்கு பூஜை செய்து முதல் கால ஹோமம் நடந்தது. பின்னர் இரண்டாம் கால யாகபூஜையுடன் நிவர்த்தியாகி, ஸ்ரீமொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் சுவாமி சிலைகள் சிறப்பு பூஜையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அன்று மாலை மதுரை ஆதீனம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள் கொண்டு யாகசாலை மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு பூஜைகள் செய்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று (ஞாயிறு) காலை 3 மற்றும் 4-ம் கால யாகபூஜை நிவர்த்தியாகி, புனிதநீர் அடங்கிய குடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து கோபுர கலசங்களுக்கும், சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது .

    மேலும்நிகழ்ச்சியில் கருப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன், இரும்பாடி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி பண்ணைச்செல்வம், கிராம பொதுமக்கள், மற்றும் முத்திருளாண்டி பங்காளிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×