search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை"

    • விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கழிவறை கட்டியதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

    புதுவையில் கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி முகமை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் புதுவை அரியாங்குப்பம் முன்னாள வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ஆகியோர் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதில் கழிவறை கட்டாமல் பயனாளிகள் பெயரை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் அரசு என்ஜினீயர் கல்லூரி இயக்குனர் பிரேமா ஆகியோரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
    • என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா முழுவதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், பிரதமர் அறிவிப்பு மக்களை ஊக்கப்படுத்தி ஊசி போட வரவழைக்கும்.

    பிரதமர் ஊக்கத்தினால் தான் கொரோனாவை எதிர்கொண்டோம். மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாவதால் பூஸ்டர் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்.

    புதுவை முழுக்க 75 பள்ளிகளை பார்க்க திட்டமிட்டு ஒவ்வொரு பள்ளியாக செல்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ திறமையாளர்கள் உள்ளனர். அரசு பள்ளியை மேம்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துள்ளேன். பள்ளிக்கு நேரடியாக செல்வதால் பல விஷயங்கள் தெரிகின்றன.

    புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைத்து சீருடை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மாணவர் பஸ் நிதித்துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    அரசு பள்ளியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அரசு பள்ளியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது இது மகிழ்ச்சியான விஷயம். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளை விட அதிகமாக நல்ல நிலைமைக்கு வர பணிகள் செய்யப்படும்.

    தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

    கவர்னர்கள் எல்லோரும் வேந்தர்களாக, அந்தந்த கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும், கவர்னரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே கவர்னருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது.

    கல்வியை மேம்படுத்ததான் கவர்னர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இன்னொரு மாநில கவர்னராக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன்.

    பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மந்திரியான அவரை அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசை சார்ந்தோர் கவர்னருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டும் விழாக்களாக கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் உரிமை இருக்கிறது.

    ரெட்டியார்பாளையம் சாலை விபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. மிகுந்த மனவேதனை அடைந்தேன். வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும் போது எச்சரிக்கை தேவை.

    சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன். தவறுகள் சரி செய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

    என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுவை மாணவர் ஒதுக்கீடு தொடர்பாக துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு தமிழகத்தில் தருவதைப்போல் புதுவையில் தருவது தொடர்பான கோப்பு நிலுவையில் இருப்பது பற்றி விசாரிக்கிறேன்

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது.
    • கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதி அளித்தது.

    தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி வருவாய் கிடைக்காது.

    இதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.

    • நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.
    • நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

    தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையை போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
    • பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

    புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரத்தை கவர்னருக்கு அளிப்பது குறித்து, நேற்று முன் தினம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதுபற்றி நான் பேசவில்லை. எந்த உரிமையையும் யாரும் கேட்கவில்லை.

    புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.

    பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, எந்த முன்னேற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். எல்லா வகையிலும் புதுவை முன்னேறப் போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது. நிகழ்ச்சியினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    பாண்லே கடைகள் மூலம் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் மாற்றாக குறைந்த விலையிலான துணிப்பைகள் மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம்- சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஸ்மிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    • சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கவர்னர் தமிழிசை பாராட்டு
    • மாணவர்கள் பயன்பெறும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதி

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் 2017-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதன் தொடக்கவிழா புதுவை கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை ஊட்டச்சத்து கலந்த பாலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர். தெலுங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்புகொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்காக என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது. மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம்.

    பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம்.

    அதனடிப்படையில்தான் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கே.ஸ்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ., அரசு கல்வித்துறை செயலர் ஜவகர், ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்கயிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×