search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து பானம்"

    • சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கவர்னர் தமிழிசை பாராட்டு
    • மாணவர்கள் பயன்பெறும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதி

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் 2017-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதன் தொடக்கவிழா புதுவை கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை ஊட்டச்சத்து கலந்த பாலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர். தெலுங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்புகொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்காக என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது. மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம்.

    பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம்.

    அதனடிப்படையில்தான் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கே.ஸ்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ., அரசு கல்வித்துறை செயலர் ஜவகர், ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்கயிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×