search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்"

    • ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களின் சார்பிலும் தனித்தனியாக அச்சிடப்பட்ட பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். 21-ந் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23-ந் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

    பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25-ந் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26-ந்தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27-ந்தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்.

    ×