search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான்கான்"

    • நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என இம்ரான்கான் சூளுரைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார்.

    இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.

    இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என சூளுரைத்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இம்ரான்கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • இம்ரான்கான், நவம்பர் 4 ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார்.
    • பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்திய இம்ரான்கான் இந்தியாவை மீண்டும் பாராட்டி பேசினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான்கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகப் பெரும் பேரணியை தொடங்கினர். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

    லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து இம்ரான்கான் பேசியதாவது:

    எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும்.

    சுதந்திரமான பாகிஸ்தானைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை.

    எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    இம்ரான்கான் ஏற்கனவே நடத்திய பேரணிகளின் போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பிற்காக லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • பதவியில் இருந்து போது அரசு பரிசு பொருட்களை இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு.
    • இது குறித்து வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.

    இந்நிலையில் தமது பதவிக்காலத்தின் போது வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டிய வைர நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களில்,  மூன்று பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.58 மில்லியன் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அரசுத் துறையான தோஷாகானா தொடர்ந்து வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான்கான் தேசிய சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. 

    • அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
    • இம்ரான்கான் கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான்கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7-ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    • இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    தேசத்துரோக வழக்கில் தனது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த கூட்டத்தில் பெண் நீதிபதிக்கு இம்ரான்கான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

    போலீஸ் அதிகாரிகள், ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு பெண் நீதிபதி ஜெபா சவுத்ரிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. மேலும் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் இருந்து சாதாரண அமர்வு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜராகி, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது இல்லத்துக்கு 300 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

    ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. இது ஆதாரமற்றது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த கோர்ட்டு விசாரணையில் இம்ரான்கான் ஆஜராக தவறினார். இதையடுத்து அவர் ஆஜராவதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நீதிபதியை மிரட்டியதாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • பெண் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

    மேலும் காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க இன்று அவர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் ஆஜரானார். நான் நீதித்துறை மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரியிடம் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன் என்று தமது டுவிட்டர் பதிவில் இம்ரான் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும் நீதிபதி விடுப்பில் இருப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் இம்ரான்கானிடம் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரான் கான் வருகை தந்ததாகவும், அவரது வார்த்தைகள் நீதிபதியின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், இதை நீதிபதி ஜெபா சவுத்ரியிடம் நீங்கள் சொல்ல வேண்டும், என்று கேட்டுக் கொண்ட இம்ரான்கான் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் தரையிறக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார்.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு திரும்பியது. இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான்கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதுதொடர்பாக விளக்கமளித்த இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக வெளியான தகவல் தவறானது. மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • இம்ரான்கானுக்கு செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், போலீஸ் உயர் அதிகாரிகளையும், நீதிபதியையும் மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, இம்ரான்கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் ஜாமீன் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடைவதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • இம்ரான்கான் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இம்ரான்கான் பொதுக்கூட்ட உரையை ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது

    இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

    • எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
    • விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் அவர் திடீரென கத்தியால் குத்தப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75), மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.

    இந்த தாக்குதலில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.

    இந்நிலையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், இச்சம்பவம் பயங்கரமானது, துயரமானது. சல்மான் ருஷ்டி மீதான கோபம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனாலும் இந்த தாக்குதல் நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    ×