search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SJaishankar"

    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது.
    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    லிபியா நாட்டை டேனியல் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின.

    டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    இதற்கிடையே, லிபியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மேலும், 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லிபியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நின்று எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை எகிப்து செல்கிறார்.
    • இந்தப் பயணத்தில் இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15-ம் தேதி 2 நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.

    இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

    • வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார்.
    • பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

    அசன்சியன்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

    இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவே சென்றடைந்தார்.

    இந்நிலையில், பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார். தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவை பாராட்டினார்.

    மேலும், பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அங்கு சுமார் இரு நூற்றாண்டுக்கு முன் பராகுவேயின் சுதந்திரப் போராட்ட இயக்கம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியை அவர் பார்வையிட்டார்.

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    ×