search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"

    • ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
    • கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை மாற்றியுள்ளதாக வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.

    பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. 

    இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

    அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நாளை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும்.

    • உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.
    • அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது.

    அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல.

    உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.

    தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறப்பட்டிருந்தது.

    • அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார்.
    • தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டு பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது என்றும் எனவே பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அளித்த தீர்ப்பில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மையமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தேவையான கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதனை வைத்து அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் என்று ஓ.பி.எஸ். கணக்கு போட்டு வைத்து உள்ளார்.

    அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார். இதற்காக தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.

    இதற்கு முன்பு பொதுக்குழு கூட்டங்கள் எப்படி நடந்தன? எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என்பதை எல்லாம் ஒப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஓ.பி.எஸ். வக்கீல்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக வியூகம் வகுத்து வருகிறார். ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தங்களுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டி அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பதை எடுத்துக் கூற உள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்காக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயாரித்து வைத்துள்ள எடப்பாடி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு காய் நகர்த்துகிறார்கள். டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்களும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கோர்ட்டிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகள் 6-ந் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, பொதுக்குழு வழக்கிலும் நிச்சயம் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பது தமிழக அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    • தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.
    • கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.

    சென்னை:

    அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.

    தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.

    மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்.

    மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது.

    இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று வைத்திலிங்கம் எம். எல் .ஏ. தெரிவித்தார்.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது.

    இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக ஓ.பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ. அன்று அளித்த  பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    • கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான்.
    • அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    கோவை:

    கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியதாவது:-

    நமக்குள் இருக்கிற பிரச்சினைகளை பேசி தீர்க்கவே நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் சொல்வது தான் இறுதி தீர்ப்பு. தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    இன்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 4½ ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துவதற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஆதரவு அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    மேலும் சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உங்களை தேர்ந்தெடுத்தாரே அதற்கு நீங்கள் கொடுக்கும் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    அ.தி.மு.க.வில் 28 ஆண்டுகள் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவர் இருந்த இடத்தில் வேறு யாரும் இனி இருக்க கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    6 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டுவிட்டு, இப்பொழுது திடீரென 2 மாதத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறீர்களே இது நியாயம் தானா?

    ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் அமரமாட்டோம் என்று சொல்லியதன் காரணமாகவே சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினோம்.

    அப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்து விட்டு, நீங்கள் ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம். இது ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ்.பக்கம் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார்.
    • கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்ற எடுத்துக்காட்டுதான் தற்போது வந்த நீதிமன்ற தீர்ப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இதுதான் அ.தி.மு.க.வின் அத்தியாயம்.

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். அ.தி.மு.க.வை ஜெயலலிதா. 3-வது மக்கள் இயக்கமாக மாற்றினார். எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மக்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றியாக இந்த தீர்ப்பு உள்ளது. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் மனம் குளிர கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.

    ஒரு இயக்கம் ஒரு தலைவரை தன்னிச்சையாக தருகிற ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உண்டு. எல்லாம் தெரிந்து கொண்டு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் சிலர் உள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமான அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது.
    • அதேநேரம், சிறப்பு பொதுக்குழுவுக்கும், வழக்கமான பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    128 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    வழக்கமான அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது. அதேநேரம், சிறப்பு பொதுக்குழுவுக்கும், வழக்கமான பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுதொடர்பாக விதியிலும் கூறப்பட்டுள்ளது. அதனால், சிறப்பு பொதுக்குழு கூட்டும் போது, தனித்தனியாக நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொதுக்குழு, சிறப்பு பொதுக்குழுவானாலும் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்று விதியில் கூறவில்லை.

    அதனால், ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடப்பது குறித்து, ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவிலேயே அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பையே முறையான அறிவிப்பாக கருதிக் கொள்ளலாம். நோட்டீஸ் என்பது குறிப்பிட்ட தகவலை தெரிவிப்பது தான். அதை எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று கூற முடியாது.

    நோட்டீசுக்கு பல வடிவங்கள் உள்ளன. அப்படியே நடைமுறை முறைகேடு இருப்பதாக கருதினாலும், அதை பொதுக்குழுவில் சரி செய்து கொள்ளலாம்.

    சிறப்பு பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்கும்போது கருதி இருந்தால், அப்படி ஒரு விதியை முன்பே கொண்டு வந்து இருப்பார்கள். இந்த சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக் கையின் படி கூட்டப் பட்டதால், மீண்டும் நோட்டீஸ் கொடுக்க வேண் டிய அவசியம் இல்லை.

    சிறப்பு பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல் குறித்த விளக்கத்தை ஜூலை 1-ந்தேதியே அறிவித்துள்ளது. சிறப்பு பொதுக்குழுவை கூட்ட 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள், கையெழுத்திட்டு அவை தலைவரிடம் கொடுத்துள்ளனர்.

    பொதுக்குழு கூட்டுவதற்கு அவை தலைவர் கண்டிப்பாக வேண்டும். அவை தலைவர் இல்லாமல் கூட்டத்தை கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே விரிசல் இருந்ததால், சிறப்பு பொதுக்குழு கூட்டும்படி 2,190 உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் வெளியிட்ட அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் இருக்கும்போது, தான் 2,500 உறுப்பினர்கள் இருக்கும்போதுதான் வெளியிடப்பட்டது. அதனால், பொதுக்குழு அறிவிப்பு எங்களுக்கு தெரியாது என்று கூறமுடியாது. 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    ஆனால், இந்த இருவருக்கு இடையே உள்ள சர்ச்சையால் இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்ட முடியாத நிலை இருந்தது. அப்படி ஒரு நிலை இருக்கும்போது, இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

    எனவே இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட உத்தரவிட முடியாது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அ.தி.மு.க.வின் செயல்பாட்டை முடக்கி விடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தார்.

    எனவே ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதா என்பதை பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர்.

    சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இன்றைய வழக்கில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ஓ. பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ . அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானது தான். நாங்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தினுள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 47 பேர் காயம் அடைந்தனர்.

    பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ந்தேதி 'சீல்' அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அ.தி.மு.க. அலுவலகத்தில் காணாமல் போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தார்.

    இதையடுத்து சி.வி. சண்முகம் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கணினிகள், கட்சியின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று ஆதாரங்களை வழங்கினார்.

    இந்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் ஆகஸ்டு 13-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன.

    இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. தொடங்கி உள்ளது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    மேலும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்த குமார் ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வழக்கில் அனைவருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள். அதேபோல கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மோதலில் ஈடுபட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை போட்டு பார்த்து போலீசார் ஆட்களை அடையாளம் கண்டு வருகிறார்கள்.

    எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கும் அ.தி.மு.க.வினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
    • அரசியல் களத்திலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி), அல்லது 2-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக கடந்த முறை சென்னை ஐகோர்ட்டில் அளித்த உத்தரவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துதான் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முறை இவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா? இல்லை மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் களத்திலும் இந்த தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்தனர்.

    கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறினார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், "மிகப்பெரிய இயக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டது" என்றனர்.

    வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அல்லது 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    ×