search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணையா அடுப்பு"

    • எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம்.
    • மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும்.

    ஒருவரிடத்தில் எதைக் கொடுத்தாலும் 'போதும்' என்று சொல்ல மாட்டார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் பணம் கொடுத்தால் 'இன்னும் கொஞ்சம் தரலாமே' என்பார்கள். ஆனால் சாப்பாடு போடுகிற பொழுது அளவிற்கு அதிகமான உணவை நாம் இலையில் அள்ளி வைத்து விட்டால் 'போதும்' என்று சொல்வார்கள். இந்த 'போதும்'' என்ற சொல்லே. அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தைக் கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்கிறோம்.

    அத்தகைய அன்னதானத்தை, மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும். அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் பரிமாற வேண்டும். தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள், சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். ஆனால் அதை தங்கள் மேற்பார்வையில் முறையாகச் செய்ய வேண்டும்.

    அன்னதானத்திற்கு பெயர் பெற்ற ஊர், வடலூர். அணையா அடுப்பு இங்கே உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் என்று அன்போடு அழைக்கப்படும் ராமலிங்கம் பிள்ளையால் தோற்றுவிக்கப்பட்ட சத்ய ஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில் மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே 1867-ல் ஏற்றப் பட்ட அடுப்பு, இன்று வரை அணையாமல் அன்னத்தை சமைத்துக் கொண்டே இருக்கிறது.

    வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம். வருடம் ஒரு முறை விழாக்களை முன்னிட்டு அன்னம் வழங்கலாம். தமது பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

    'பசி' என்று வரும் இயலாதவர்களுக்கு, முகமலர்ச்சியோடு உணவளித்தாலே அது அன்னதானம் தான். பசித்தவருக்கு இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்யுங்கள். இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து எந்நாளும் உதவி செய்வான்.

    இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உணவை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். கொடுப்பதற்கு ஆளின்றி இருக்கும் இவ்வுலகில், உணவை கெடுப்பதற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதீர்கள்.

    ×