search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashasvi Jaiswal"

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

    மேலும், கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார்.
    • ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

    ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 21 வயது 123 நாட்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார். இதன்மூலம் 22 வயதில் சதமடித்த சஞ்சு சாம்சனை 5-ம் இடத்திற்கு தள்ளி 4-ம் இடத்தை பிடித்துள்ளார். மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அவர் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார். தேசிய அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

    • கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்த ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்தார்
    • அர்ஷித் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோஸ் பட்லர் 18, கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன், தேவ்தத் படிக்கல் 2 ரன், ஹோல்டர் 11 ரன், ஹெட்மயர் 8 ரன், துருவ் ஜுரல் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 

    முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபோதிலும், பதற்றம் இல்லாமல் முன்னேறிய ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 124 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் அஷ்வினுடன் டிரன்ட் போல்ட் இணைய, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அஷ்வின் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அர்ஷித் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஜோப்ரா ஆர்ச்சர், ரிலே மியர்டித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்தார்.
    • இரண்டாவது இன்னிங்சில் 144 ரன்கள் குவித்தார்.

    இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2-வது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது.


    இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி, யஷ் துபேவின் சதத்தால்(109) 294 ரன்கள் அடித்தது. மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யாததால் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

    190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்களை குவிக்க, 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 246 ரன்கள் அடித்தது. மொத்தமாக 436 ரன்கள் முன்னிலை பெற, மத்திய பிரதேச அணி 437 ரன்கள் என்ற கடின இலக்கை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம்(213) மற்றும் 2-வது இன்னிங்சில் சதமடித்ததன் (144) மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

    இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இரானி கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. #U19AsiaCup #YashaviJaiswal #India #Victory #Afghanistan
    டாக்கா:

    8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 45.3 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (92 ரன், 93 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), அயுஷ் படோனி (65 ரன்) அரைசதம் விளாசினர்.

    அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரமனுல்லா குர்பாஸ் (37 ரன்), ரியாஸ் ஹூசைன் (47 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 45.4 ஓவர்களில் 170 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் தேசாய் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷ் தியாகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் (பி பிரிவு) பாகிஸ்தானை சாய்த்தது.

    லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி), ‘பி’ பிரிவில் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. பாகிஸ்தான் அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போல் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும் நடையை கட்டின.

    டாக்காவில் நாளை நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. 5-ந்தேதி நடக்கும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 7-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது.  #U19AsiaCup #YashaviJaiswal #India #Victory #Afghanistan
    ×