search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup football"

    • முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை.
    • வெற்றி மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது.

    ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 46வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த டேலி பிளைன்ட் 2வது கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

    2வது பாதி ஆட்டத்தில் 76 வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்ப்ரைஸ் தமது அணிக்காக 3வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

    • இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்தது மெக்சிகோ.
    • ஒரு கோல் அடித்த சவுதி அரேபியா தோல்வி அடைந்தது.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் சமநிலை நீடித்தது. 2வது பாதியின் 47வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹென்றி மார்ட்டின் முதல் கோலை அடித்தார்.

    தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பிரி கிக் முறையில் மற்றொரு வீரர் லூயிஸ் சாவேஸ் கோல் அடித்து மெக்சிகோவை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் முடிவில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 95வது நிமிடத்தில் சவுதி வீரர் அல் தவ்சாரி கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மெக்சிகோ இழந்தது. அதேபோல் சவுதி அரேபியாவும்  போட்டியில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 46வது நிமிடத்தில் அலெக்சிஸ் அடித்த கோல் மூலம் அர்ஜென்டினா முன்னிலை

    உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி போலந்தை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முதல் பாதியில் அமெரிக்க வீரர் கோல் அடித்தார்.
    • இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    2வது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய ஈரான் வீரர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    • இரண்டாவது சுற்றில் விளையாட போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.
    • இரண்டாவது பாதியில் புருனோ பெர்னாண்டஸ் 2 கோல்கள் அடித்தார்.

    உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற குரூப் ஹெச் பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 2வது பாதியின் 54 வது நிமிடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ  தலையால் முட்டி உருகுவே வலைக்குள் பந்தை தள்ளினார். ஆனால் மற்றொரு வீரர் புருனோ பெர்னாண்டஸ் மேல் பந்து பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் பெர்னாண்டசிற்கு வழங்குவதாக அறிவித்தார். 


    ஆட்ட நேரம் முடிந்து நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 93வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து  வெற்றியை உறுதி செய்தார். 


    இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல், தனது .பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

    • முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
    • ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது பிரேசில்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் வலிமையான பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார். இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    • முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'இ' பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

    இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

    போட்டியின் முடிவில் 'இ' பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது.
    • இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல.

    ரியாத்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.

    2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.

    இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.

    சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் கால்பந்து வீரர்களை வெகுவாக பாராட்டும்.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும்.

    ரியாத்:

    ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான சவுதி அரேபியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டி னாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.

    பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது. ஆசிய அணிகளின் 5-வது முயற்சியில் இது சாத்தியமாகி உள்ளது.

    36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றிக்கு சவுதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை 51-வது வரிசையில் உள்ள சவுதி அரேபியா வீழ்த்தியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகும்.

    6-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சவுதி அரேபியாவுக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ல் மொராக் கோவை 2-1 என்ற கணக்கிலும், பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கிலும், கடந்த உலக கோப்பை யில் எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    அர்ஜென்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியை சவுதி அரேபிய மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம் இருந்தது. தலைநகர் ரியாத் முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.


    நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்களில் சென்றவர்கள் கதவுகளை திறந்து சவுதி அரேபியா கொடியை பறக்க விட்டு உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி காரணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் இதை நேற்று தெரிவித்தார்.

    அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இறுதி தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் பள்ளிகள் இன்று மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வேறு தேதியில் பள்ளி தேர்வு நடத்தப்படுகிறது.

    மேலும் பொதுபோக்கு மையங்களுக்கும் நேற்று நுழைவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    ×