search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon Tennis"

    • முர்ரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்க வீரர் தகுதி.
    • இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் வெற்றி.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.

    இதில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சக நாட்டை சேர்ந்த கெக்மனோவிச்சை அவர் சந்திக்கிறார்.

    மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பிரிட்டடை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினர். இதில் 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை வீழ்த்திய இஸ்னர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • செரீனா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார்.

    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா), முன்னாள் சாம்பியன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபிரகாசமான வாய்ப்புள்ளது.

    ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார். 40 வயதான செரீனா 7 முறை விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.

    இந்த விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.387 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.19¼ கோடி கிடைக்கும். 2-வது இடத்தை பெறுவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடி ரூ.5¼ கோடியை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது.

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூ. 392 கோடி ஆகும்.

    ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோற்பவர்கள் ரூ.9.5 கோடி பெறுவார்கள்.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #SerenaWilliams #Federer
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை தோற்கடித்து 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ்சை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கனடா வீரர் மிலோஸ் ரானிச் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவை சேர்ந்த தகுதி சுற்று வீராங்கனை எவ்ஜெனியா ரோடினாவை எளிதில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    ஏஞ்சலிக் கெர்பர் ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்ட காட்சி

    மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #SerenaWilliams #Federer
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #Muguruza #Nadal
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் துடிசெலாவை (இஸ்ரேல்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் 4-6, 5-7, 0-2 என்ற செட் கணக்கில் பாக்தாதிசுக்கு எதிராக (சைப்ரஸ்) பின்தங்கி இருந்த போது முதுகு வலி காரணமாக விலகினார். இதனால் பாக்தாதிஸ் 2-வது சுற்றை எட்டினார்.

    ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் 6-2, 3-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் வீழ்ந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்த வெற்றியும் பெறாத யுகி பாம்ப்ரி 5-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறார்.

    அதே சமயம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் முதல் தடையை எளிதில் கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் நவோமி பிராடியை (இங்கிலாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

    2011, 2014-ம் ஆண்டு சாம்பியனான கிவிடோவா (செக்குடியரசு) 4-6, 6-4, 0-6 என்ற செட் கணக்கில் சாஸ்னோவிச்சிடம் (பெலாரஸ்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். #Wimbledon2018 #Muguruza #Nadal
    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #wimbledon2018
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (குரோஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகிய முன்னணி வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.


    புல்தரையில் ஆடுவதில் கில்லாடியான 36 வயதான பெடரர் 9-வது முறையாக மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர் தனது முதல் சுற்றில் துசான் லாஜோவிச்சுடன் (செர்பியா) இன்று மோதுகிறார். நடால் தனது முதல் சவாலை, துடி சிலாவுடன் (இஸ்ரேல்) தொடங்குகிறார்.

    ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி உள்பட 6 இந்தியர்கள் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, காயத்தில் இருந்து மீண்டு வந்த ஒலிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை விம்பிள்டனை வென்றவருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேருடன் முதல் சுற்றில் விளையாடுவதாக இருந்தார். ஆனால் இன்னும் முழுமையான உடல்தகுதியை எட்டவில்லை என்று கூறி நேற்று போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் முகுருஜா (ஸ்பெயின்), வோஸ்னியாக்கி (ஆஸ்திரேலியா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரிய ஷரபோவா (ரஷியா) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள். இவர்களுடன் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்துள்ள 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) களத்தில் குதித்துள்ளார்.


    முதல் சுற்றில் நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸ்சை எதிர்கொள்ளும் செரீனா, இங்கு பட்டத்தை வசப்படுத்தினால், பெண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 பட்டம்) சாதனையை சமன் செய்து விடுவார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.307 கோடியாகும். இதில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.20¼ கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.

    இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #Wimbledon #wimbledon2018
    ×