search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac shops"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
    • சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்தது. தினமும் ரூ.180 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். மதுபார்கள் முழுமையான அளவில் செயல்படாத நிலையிலும் மதுவிற்பனை குறையவில்லை.

    ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை குறைந்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் மதுவிற்பனை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 3 சதவீதம் மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

    மாவட்ட மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி மது விற்பனை நடைபெறுவதால் டாஸ்மாக் விற்பனை சரிவுக்கு காரணம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் மது விற்பனை குறைவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    • தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
    • நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.

    நாளை (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை சரக்கு கிடைக்காது என்பதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.

    இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் இன்று குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. எல்லோருமே நாளைக்கும் இருப்பு வைக்கும் வகையில் பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றனர்.

    இன்று கடை திறந்தவுடனேயே பெரும் அளவில் படையெடுத்து வந்து மது பாட்டில்களை வாங்கினார்கள்.

    தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.

    • மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
    • மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் பலர் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதில் வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

    இதனால் மதுக்கடைகளை நடத்தும் 'டாஸ்மாக்' நிறுவனம் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமீப காலமாக டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது. இதனை தலைமை அலுவலக ஆய்வு குழு மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஆய்வு செய்த பொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடை பணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடை பணிகளில் ஈடுபடுத்துவதும் தெரிய வருகிறது.

    எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் நியமிக்கப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்) அனைவரும் பணி நேரத்தில் பணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தவிர மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.

    தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க வருகை புரியும் கடைப்பணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் அனுமதி மற்றும் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளரின் அலுவலக முத்திரை பெற்றே வரவேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர்கள் கடைக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது அனைத்து கடை பணியாளர்களும் கடைப்பணியில் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி பணி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் நகர்வு பதிவேடுகளில் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதை கண்காணித்து அவ்வாறு பதிவேடுகளில் பதியவில்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
    • பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்கள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் மதுக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் பார்களில் அமர்ந்து மது அருந்த முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதனால் ரோட்டோரங்களில் அமர்ந்தே சென்னை குடிமகன்கள் மது குடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பார்களுக்கான உரிமத்தை வழங்கக்கோரி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

    சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    இந்த மாத இறுதிக்குள் பார்களுக்கான உரிமத்தை வழங்காவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900 மதுக்கடைகளையும் பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
    • காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் வெளி யிட்டு உள்ள செய்திக்குறி ப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினம் டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள்மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மா க்மது பானக் கடைகள், டாஸ்மாக் மது பானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது. இவ்வாறு அதில் கூறிப்பிட்டு உள்ளார்.

    • மதுரை மண்டலத்தில், கடந்த 2020-ம் ஆண்டு 303 கடைகளும், 2021-ம் ஆண்டு 246 கடைகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 164 கடைகளும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளன.
    • டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதி பெறாத சட்டவிரோத கடைகள் எதுவும் இயங்கவில்லை.

    மதுரை:

    மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரியிடம், சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளது.

    அதில் மதுரை மண்டலத்தில், கடந்த 2020-ம் ஆண்டு 303 கடைகளும், 2021-ம் ஆண்டு 246 கடைகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 164 கடைகளும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதி பெறாத சட்டவிரோத கடைகள் எதுவும் இயங்கவில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்று நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் எண்ணிக்கை, ஒரு கடையை மட்டும் பார்க்கும் சூப்பர்வைசர், 2 கடைகளை பார்க்கும் சூப்பர்வைசர் எண்ணிக்கை, சூப்பர்வைசர் இல்லாமல் காலியாக உள்ள கடைகள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை தர இயலாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.
    • பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான் கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்நிலையில், பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் எனவும், யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

    • டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்குபவர்கள் இந்த பார்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இதற்கிடையே இந்த பார்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பார்களை நடத்துவதற்கு அரசு சமீபத்தில் டெண்டர் கோரியது.

    ஆனால் இந்த டெண்டர் செயல்முறை வெளிப்படையானதாக இல்லை என்பதால் டெண்டர் முடிவை அறிவிக்க சென்னை ஐகோர்ட்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை தடை விதித்திருந்தது. இதையடுத்து டாஸ்மாக் பார்களுக்கு இதுவரை டெண்டர் விடப்படவில்லை.

    டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்க தலைவர் அன்பரசன் கூறுகையில், 'டாஸ்மாக் முடிவு குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். இனி பார்களை திறக்க கூடாது என்று எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் பார்களை திறக்க தயாரானோம்.

    டெண்டர் முடிவடையும் வரை பார்களை திறக்க அனுமதிக்கலாம். அதற்கான மாத தவணையை எங்கள் வைப்புத்தொகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம். இது டாஸ்மாக் அதிகாரிகள் சட்டவிரோதமாக பார்களை நடத்த வழி வகுக்கும்' என்றார்.

    • சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது.
    • மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் டாஸ்மாக் பார்கள் ஏலத்தில் விடப்பட்டன.

    சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

    முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மற்ற பார்களுக்கு ஏலம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் மீதம் உள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் பார்களுக்கு வருகிற 18-ந்தேதி ஏலம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலமும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

    இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் எழும்பூரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில், 30 மாவட்டங்களில் 80 சதவீத பார்களின் ஏலம் உறுதி செய்யப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே இனி நடைபெற உள்ள பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அரசியல் தலையீட்டால் பார் டெண்டரில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக அறிகிறோம். அதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
    • ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    சென்னை:

    டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் 38 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    30 மாவட்டங்களுக்கு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய வேண்டி அறிவுறுத்தப்பட்டு, முறையே இரண்டு வரு டங்களுக்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மதுக்கூடங்கள் மூடப்பட்ட நிலையிலும் மற்றும் மதுக்கூட இடவசதி இருந்தும், டெண்டர் பெறப்படாமல் உள்ள மதுக்கூடங்கள் தற்போது செயல்படாமல் உள்ள நிலையில் உள்ளது என மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    மேலும் மதுக்கூட ஒப்பந்தம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள் அதாவது சென்னை வடக்கு, தெற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, கிருஷ்ணகிரி மற்றும் அரக்கோணம் போன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்திடவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன், டாஸ்மாக் பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    டாஸ்மாக் பார் ஏலத்தில் கடந்த முறை பல்வேறு தடைகள், குறுக்கீடுகள் இருந்தன. இதனால் டெண்டர் முறைப்படி நடத்தவில்லை. பல இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் கூட பார் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் எந்தவித முறைகேடும் இன்றி வெளிப்படையான முறையில் ஏலத்தை நடத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு முறைகேடு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு பார் உரிமையாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலையீடு இல்லாமல் ஏலத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள மகேஸ்வரி நகர், புவனேஸ்வரி நகர், சுப்பிரமணி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "புதிதாக திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டும் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

    இதையெல்லாம் மீறி டாஸ்டாக் கடையை திறக்க சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

    பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களும், டாஸ்மாக் கடைய திறந்தால் பாதிக்கப்படுபவார்கள் என்றும் எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது.
    • வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கூலிங் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    குறிப்பிட்ட பீர் வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    இதனால் ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதமும், மே மாதத்தில் 25 சதவீதமும், ஜூன் மாதத்தில் 40 சதவீதமும் பீர் விற்பனை அதிகரித்தது.

    இந்த நிலையில் தற்போது ஜில் பீர் விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜில் பீர் விற்பனை சரிந்தது.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் பீர் விற்பனை 45 சதவீதம் வரை அதிகரித்தது. அதனால் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் 'கூலிங்' பீர் விற்பனை குறைந்தது.

    சென்னையில் மட்டும் 20 சதவீதமும், தமிழகம் முழுவதும் 30 சதவீதமும் ஜில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணியத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை ஒரு வாரமாக நடக்கிறது.

    90 நாட்களுக்கு மேலான உயர் வகை சரக்குகள் கடையில் இருப்பு வைக்க கூடாது, எந்த பிராண்ட் மது அதிகளவு விற்கப்படுகிறதோ அதனை ஒரு வாரம் விற்பனை அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

    நடுத்தர, குறைந்த ரக மதுபானங்கள் அதிகமாக விற்பனை ஆவதால் அதனை 'இல்லை' என்று சொல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை, வெளிநபர்கள் வேலைபார்த்தல், சட்ட விரோத பார் செயல்படுதல் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவிக்கின்றது.

    ×