search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK Protest"

    பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். #PMK #Ramadoss #FuelPrice
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.86.28ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து ரூ.78.49 ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையின்றி எரிபொருள் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி தொடங்கிய விலை உயர்வு நீடிக்கிறது. கடந்த 43 நாட்களில் ஒருமுறை கூட பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறை ரூ.6.14 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 43 நாட்களில் 35 முறை ரூ.5.90 உயர்த்தப்பட்டு ரூ.78.49 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

    சென்னையில் விருப்பம் போல பயணிப்பதற்கான மாதந்திர பயணக் கட்டண அட்டையின் விலை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக, அதாவது 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல மேலும் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.470 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது ரூ.600 கோடியாக அதிகரிக்கும். நடப்பாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.4000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனும் போது அதை விட்டுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5.00 வரை குறைக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.

    மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உட்பட அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #FuelPrice
    ×