search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi Violence"

    • சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையானது.
    • இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது, கைது நடவடிக்கை தொடரும்.

    சின்னச்சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    அந்த பள்ளியில் இன்று தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தீக்கிறையான பள்ளி அறைகள் மற்றும் அலுவல அறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:

    மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர்.

    தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

    சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது.

    வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது. கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் இத்துறையின் நிபுணரா? என கேள்வி எழுப்பினார். அதேசமயம், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த நிதிபதி, பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    'மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், சமூக வலைத்தளங்கள், மீடியா டிரையல் நடத்த அனுமதிக்கக்கூடாது. மறு பிரேத பரிசோதனையின்போது மனுதாரர் தனது வக்கீலுடன் இருக்கலாம் ' என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
    • சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளியின் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாகின. இது தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



    அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.

    மேலும் நிதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிபதி கூறியதாவது:-

    சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    • தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது சட்டத்தை மீறும் செயல்.
    • மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகள் நாளை தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டுமே உள்ளதாகவும்,பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவது வழக்கம் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும், நாளை தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பனீந்தர் ரெட்டி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் கலையப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அனைத்து கோணங்களிலும் சரியாக விசாரணை செய்து முடிவு எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளதாவது:

    மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அந்த பகுதியில் டிஐஜி தலைமையில் 530 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலவரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் அடங்கி உள்ளது. கலவரக்காரர்கள் தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 52 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காயம் ஏற்பட்டாலும் அவர்கள் அமைதி காத்தனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு.
    • தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் இன்று கலவரமாக மாறியது.

    அந்த தனியார் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.

    மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்களுக்கு தீ வைத்தனர். அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளின் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்குறிச்சி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பள்ளியில் படித்து வரும் ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நாளை காலை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், நிர்வாகிகள், கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு 2 நாட்களுக்குள் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் தனியார் பள்ளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சிபிஎஸ்சி கல்வி முறையில் இயங்கும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளால் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×