search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ்-  நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்
    X

    நந்தகுமார்  தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் (கோப்பு படம்)

    தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ்- நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×