search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்- டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி
    X

    பனீந்தர் ரெட்டி     சைலேந்திர பாபு 

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்- டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

    • இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பனீந்தர் ரெட்டி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் கலையப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அனைத்து கோணங்களிலும் சரியாக விசாரணை செய்து முடிவு எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளதாவது:

    மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அந்த பகுதியில் டிஐஜி தலைமையில் 530 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலவரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் அடங்கி உள்ளது. கலவரக்காரர்கள் தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 52 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காயம் ஏற்பட்டாலும் அவர்கள் அமைதி காத்தனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    Next Story
    ×