search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepavali"

    • குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
    • மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

    2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

    3. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.

    4. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

    5. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.

    6. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    7. பட்டாசுகளை வெடிக்கும்போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.

    8. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.

    9. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

    10. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

    11. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

    12. எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    13. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

    14. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    15. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.

    16. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.

    17. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    18. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துகள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.

    19. தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

    மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையுடனும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக 1. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், 2. குற்ற தடுப்பு முறைகள், 3. போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    * சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு போலீசார் மற்றும் கூடுதல் கவனங்களுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெருநகரில் புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    * தி.நகர்-7, வண்ணாரப்பேட்டை-3, கீழ்பாக்கம்-3 மற்றும் பூக்கடை-4 என மேற்கூறிய 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு, நேரடியாகவும் 21 பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச்செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

    * தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    * தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    * தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் அகன்ற திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    * மேற்கூறிய 4 இடங்களிலும், போலீசார் மூலம் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரில் ஏற்படாமல் அறிவித்துக் கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    * மேலும், 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலி பரப்பப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    * தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 டிரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

    * பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எப்.ஆர்.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் சுழற்சி முறையில், எப்.ஆர்.எஸ். காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ் அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    * காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சுற்றுக்காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சென்னை பெருநகர காவல் துறையின் நடமாடும் உடமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    * பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

    * முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

    * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே. நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
    • விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ந் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.

    ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் செயல்பாட்டில், விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    • தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம்.
    • ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவ.12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தில் வருகிறது. இதனால் தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (கேதார - கவுரி விரத நோன்பு) விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கடந்த ஆண்டு தீபாவளி அக்.24-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அக்.22-ந் தேதி அரசு அறிவித்தது.

    இதனால் கடைசி நேர அறிவிப்பால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், மீண்டும் பணிக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி மக்கள் தற்போது தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 வாரங்களாகவே அங்குள்ள ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

    பொதுமக்களை கவரும் வகையில் கடைகளும் தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளதால், மக்கள் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கு அணிய புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதியில் காலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாடைகளை எடுத்து சென்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் காணப்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் கூடுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வெடிகுண்டு நிபுணர்களும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    நேற்று முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இன்று காலை, வெடிகுண்டு நிபுணர் குழுவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரிய கடைவீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர். தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கோனியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் சோதனை நடைபெற்றது. ரெயில் நிலைய பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    யாராவது ரெயிலில் வெடிபொருட்களை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை தினமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.
    • தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.

    அந்த வகையில், கடந்த மாதமே முன்பதிவு தொடங்கியது. அதன்படி, வருகிற 9-ந்தேதி பயணிக்க 25 ஆயிரம் போ், 10-ந் தேதி பயணிக்க 45 ஆயிரம் போ், 11-ந்தேதி பயணிக்க 20 ஆயிரம் போ் என மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதில், அதிகபட்சமாக சென்னையில் இருந்து வருகிற 10-ந்தேதி பயணிக்க 28 ஆயிரம் பேரும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க 15 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதேபோல, தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    • ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன.
    • சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இதனால் சென்னையில் கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.

    சென்னையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு வசதியாக அமைந்தது.

    இதனால் இன்று காலையில் இருந்தே சென்னையில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடைகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அனைத்து கடைகளிலுமே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னையின் முக்கிய வணிக மையமாக விளங்கும் தி.நகரில் இன்று காலையில் இருந்தே ஏராளமான மக்கள் குவிந்து தீபாவளி கொண்டாடுவதற்கு தேவையான ஜவுளி, நகைகள் போன்றவற்றை ஆர்வமாக வாங்கினார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன. நடக்கக்கூட இடம் இல்லாத வகையில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதே போல் கடைகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது.

    இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உஸ்மான் சாலையில் உள்ள கடைகள், தெருவோர கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள்.


    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நின்றபடியும் போலீசார் கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர்.

    அந்த பகுதியில் சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏராளமான ஆண் போலீசாரும், பெண் போலீசாரும் சாதாரண உடையிலும் கண்காணித்தனர். பெண் போலீசார் சேலை மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு பொருட்கள் வாங்க செல்வது போல் கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டு பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா என்றும் காண்காணித்தனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கமாக கண்காணிப்பு பணிக்காக 50 நிரந்தர சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக மேலும் 50 சி.சி.டி.வி கேமராக்கள் நேற்று முதல் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்தே போலீசார் கண்காணித்தனர்.

    தி.நகர் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டு உள்ளன. அது போன்றவர்களை பார்த்தால் மிகவும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற பழைய குற்றவாளிகள் தீபாவளி கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களின் முக அடையாளங்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி கொண்ட நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இனிவரும் நாட்களிலும் சனிக்கிழமை வரை மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இன்னும் 2 நாட்களில் தி.நகர் ரங்கநாதன் தெரு பகுதியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்படுகிறது.

    பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணம், அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். மேலும் முன்பின் தெரியாதவர்கள் வந்து பேசினால் அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள்.

    இதேபோல் தி.நகர் பாண்டி பஜார், பனகல் பார்க், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் பஸ் நிலையம், ஜி.என்.செட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    சென்னை புரசைவாக்கத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இங்கும் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்லக்கூட இடம் இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது.

    ஜவுளிகளின் மையமாக திகழும் வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஜவுளிக்கடைகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இங்கு குவிந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான ஜவுளிகளை வாங்கினார்கள்.

    சென்னை, புறநகர் பகுதிகள், மீஞ்சூர், பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வண்ணாரப்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கினார்கள். புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி போலீசார் எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

    சென்னை குரோம்பேட்டை தற்போது வணிக மையமாகவே மாறியுள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களின் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஏராளம் உள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இங்கும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து தீபாவளி பண்டிகைக்கான ஆடைகள், நகைகள் மற்றும் பொருட்களை வாங்கினார்கள். குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கூட ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து குவிந்தனர். இதனால் குரோம்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் இன்று வியாபாரம் களை கட்டியது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    இதேபோல் சென்னை பாரிமுனை, தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், பாடி, மயிலாப்பூர், அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து வணிக பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் குவிந்து ஜவுளி, நகைகள், அணிகலன்கள், செல்போன்கள், டி.வி. மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை வாங்கினார்கள்.

    இதேபோல் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள கடைகளிலும் தீபாவளி ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கடை வீதிகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால், ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், சென்னை சென்டிரல் - நெல்லை இடையே 3 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8, 15 மற்றும் 22-ந்தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06051) அடுத்தநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 9, 16 மற்றும் 23-ந்தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06052) அடுத்தநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.
    • பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை, நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    இதற்காக தற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வெடிபொருள் சட்டத்தின் கீழ் தீயணைப்புத்துறை விதித்து உள்ளது.

    தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

    அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைப்பதற்கு 6,500 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இதில் 5,800 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எஞ்சிய விண்ணப்பங்களில் பெரும்பாலானவை பரிசீலனையில் உள்ளதாகவும், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசு கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரை 350 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும் என அத்துறையினர் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையம் மட்டுமல்லாது, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் சாலைகளில் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதன்படி, நவ. 9, 10, 11 ஆகிய நாட்களில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகளை இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

    இந்த சமயத்தில் நகருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இடங்களை ஒதுக்க காவல் துறை, நெடுஞ்சாலை துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.
    • ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

    ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.

    ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும்.

    திருப்பூர்:

    அன்றாட பயன்பாட்டில் பின்னலாடைகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், விளையாட்டு ஆடைகள், வாக்கிங் மற்றும் ஜிம் செல்லும்போது அணியும் ஆக்டிவ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் என பல்வகை ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியையொட்டி பின்னலாடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரில் சூடுபிடித்துள்ளது. டீ-சர்ட், இரவு நேர ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

    மேலும் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஒரு மாதமாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடை கொள்முதல் செய்து முடித்து விட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தீபாவளிக்கு முந்தைய 10 நாட்கள் ஆடை விற்பனை களைகட்டும். அதற்காக கடந்த சில நாட்களாக திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் விழாக்கால விற்பனைக்கான கொள்முதலும், ஆர்டர் விசாரணையும் பரபரப்பாக நடந்து வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும். அதற்காக குறு, சிறு வியாபாரிகள், புதிய ஆடைகளை, உள்ளாடைகளை கொள்முதல் செய்ய காதர்பேட்டை மொத்த விற்பனை கடைகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் ஆடைகள் வாங்க வருகின்றனர். இதனால் திருப்பூர் காதர்பேட்டை பகுதிகளை கட்ட தொடங்கி உள்ளது.

    ×