search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி பண்டிகையையொட்டி  கோவை கடைவீதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கடைவீதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

    • பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி மக்கள் தற்போது தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 வாரங்களாகவே அங்குள்ள ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

    பொதுமக்களை கவரும் வகையில் கடைகளும் தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளதால், மக்கள் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கு அணிய புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதியில் காலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாடைகளை எடுத்து சென்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் காணப்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் கூடுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வெடிகுண்டு நிபுணர்களும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    நேற்று முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இன்று காலை, வெடிகுண்டு நிபுணர் குழுவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரிய கடைவீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர். தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கோனியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் சோதனை நடைபெற்றது. ரெயில் நிலைய பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    யாராவது ரெயிலில் வெடிபொருட்களை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை தினமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×