search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvIND"

    • காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி சிட்டகாங்கில் நடக்கிறது.

    இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அதே போல் கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    • வங்காள தேச அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
    • 2-வது போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது.

    இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.

    பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஃபார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில் ''நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    • நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது.
    • மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    மிர்புர்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காளதேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது. இதில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து தள்ளாடிய வங்காளதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர்.

    முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது 'கன்னி' சதத்தை பூர்த்தி செய்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர்.

    பின்னர் 272 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ஆனால் 50 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றியை ருசித்தது. இதனிடையே வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.

    • 2-வது ஒருநாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேச அணி.
    • அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    மிர்புர்:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.

    இந்நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இப்போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங்கின்போது 9வது வீரராக களமிறங்கினார்.

    இந்தியா 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 46வது ஓவரில் தீபக் சாஹரின் விக்கெட்டை இந்தியா இழந்ததும், ரோகித் பேட்டிங் செய்ய வந்தார். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் நிச்சயம் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்து வரை சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

    இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும், காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா ஆடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

    'தலை வணங்குகிறேன் ரோஹித் சர்மா. கட்டைவிரல் காயத்துடன் பேட்டிங் செய்வதற்கு துணிச்சலான முடிவை எடுத்தார். அத்துடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதும், அவர் தனது சக்தி முழுவதையும் கொடுத்து வெற்றியை நெருங்கினார். காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..!' என ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி உள்ளனர்.

    • ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
    • 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்

    வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.

    அதை பயன்படுத்திய ஹசன் 38* (39) ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

    ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

    உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.

    சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.

    ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும் என்று கூறினார்.

    அவர் கூறியதை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.

    • 186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை.
    • வங்காளதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    மிர்புர்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

    முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்தியா 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. பின்னர் வங்காளதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தோம். அதன் மூலம் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடி நாங்கள் பழக்கப்பட்டவர்கள். அதனால் இதற்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது. அடுத்த போட்டியை எதிர்பார்த்து உள்ளோம்" என ரோகித் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்கா:

    இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.

    வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.

    ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்கள் அடித்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    மிர்புர்: 

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஷேகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். 


    இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்களாதேசம் அடுத்ததாக விளையாடுகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறது.

    நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது.
    • குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்திய அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. அந்த பயணத்தில் டி20 உலக கோப்பைக் கோப்பைக்கு பின் நியூசிலாந்தில் விளையாடிய இந்தியா டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும் அத்தொடரில் இல்லாத கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி அடுத்ததாக பக்கத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. என்ன தான் சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே சவாலை கொடுக்கும் வங்கதேசம் இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராட உள்ளது.

    குறிப்பாக கடைசியாக கடந்த 2015இல் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு 2 -1 (3) என்ற கணக்கில் வென்ற வங்கதேசம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த மலரும் நினைவுகளுடன் இத்தொடரில் அந்த அணி விளையாடுகிறது. மறுபுறம் 2007 உலக கோப்பை தோல்வி உட்பட வரலாற்றில் சந்தித்த தோல்விகளை மனதில் வைத்து சிறப்பாக செயல்பட காத்திருக்கும் இந்தியா இம்முறை வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2023 உலகக்கோப்பைக்கு தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளது.

    இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தாக்கா நகரில் இருக்கும் ஷேர்-ஈ-பங்ளா மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2006இல் தோற்றுவிக்கப்பட்டு 25,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 13 ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 3 போட்டிகளில் வங்கதேசம் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (786) குவித்த இந்திய வீரராகவும் அதிக சதங்கள் (4) அடித்த இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் (183) பதிவு செய்த இந்திய வீரராகவும் விராட் கோலி திகழ்கிறார்.

    இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் (17 விக்கெட்கள்) உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள இந்திய பவுலர் : இர்பான் பதான் – 4/32. வெதர் ரிப்போர்ட்: சமீபத்திய உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மழையால் நிறைய போட்டிகள் ரத்தானதால் வீரர்களும் ரசிகர்களும் மிகவும் கடுப்பானார்கள். ஆனால் இப்போட்டி நடைபெறும் தாக்கா நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு கொஞ்சமும் கிடையாது. குறிப்பாக மேகமூட்டம் கூட இல்லாமல் தெளிவான வானிலை நிலவும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

    இப்போட்டி நடைபெறும் தாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது. அதாவது இங்கு வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் பழைய பந்தில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை கடைபிடித்தால் மட்டுமே கட்டுக்கோப்பாக செயல்பட முடியும். சொல்லப்போனால் புதிய பதில் கூட இங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் கை கொடுக்காது.

    அதே சமயம் போட்டி நடக்க நடக்க ஸ்பின்னர்கள் அதிக ஆதிகத்தை செலுத்துவார்கள். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும். அதனால் புதிய பந்துகளையும் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ள தெரிந்த பேட்ஸ்மேன்கள் இம்மைதானத்தில் பெரிய ரன்களை குவிப்பார்கள். அதை விட இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 263 ஆகும். சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 185 ஆகும். அதாவது இம்மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதை விட சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். அதனாலேயே கடைசி 3 போட்டிகளில் இங்கு முதலில் பந்து வீசிய அணிகள் தோல்வியை சந்தித்தன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து 250 – 300 ரன்களை எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×