search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur Temple"

    • கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தஞ்சை பெரிய கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    தஞ்சை:

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பவுர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.


    இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளிமாநில பக்தர்கள் ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் " டிரஸ்கோடு" என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோவில் நுழைவு வாயில், காலணி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை பார்த்த சமூக ஆர்வலர்கள், இது வரவேற்கத்தக்கது என்றும் பக்தர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    • உலகத்து அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
    • சமய பெரியவர்கள் திருவதியை, தஞ்சை பெரிய கோவிலின் தந்தை என்று வர்ணிப்பதுண்டு.

    தஞ்சை பெரிய கோவிலை நாம் உலகத்து அதிசயங்களில் ஒன்று என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தஞ்சை கோவில் கோபுரம் கம்பிரமாக நிற்பதை கண்டு நாம் பெருமையும், ஆச்சரியமும் கொள்கிறோம்.

    ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் மிகப் பிரமாண்டமாக, உலக அதிசய சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்கு அடிப்படையாக இருந்தது திருவதிகை கோவில்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. திருவதிகை கோவில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட ராஜராஜசோழன், சோழ மண்டலத்தில் இப்படியரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.

    எனவேதான் சமயப் பெரியவர்கள் திருவதியை திருத்தலத்தை தஞ்சை பெரிய கோவிலின் தந்தை கோவில் என்று வர்ணிப்பது உண்டு.

    ஆலய அமைப்பு, கருவறை அமைப்பு, லிங்கம் அமைப்பு உள்பட பல விஷயங்களில் திருவதிகை திருத்தலம் போலவே தஞ்சை பெரிய கோவிலும் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவதிகை கோவிலின் கருவறை ராசசிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தேர் போன்று இருக்கிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் மாடகோவில்கள் இருக்கின்றன.

    இந்த மாடகோவில்களில் நான்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மூன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது ஐந்து நிலைகளை உடையது.

    மேல் நிலையில் விமானம் பண்டியல் எண் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்களிலும் அட்ட திக்கு பாலகர்களின் சுதை உருவம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு நிலைகளிலும் நான்கு புறமும் சிவனின் வடிவங்களும், விஷ்ணுவின் வடிவங்களும், பிரம்மாவின் வடிவங்களும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன.

    கல்காரம் எனப்படும் கீழ்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களிலும் சுதை உருவங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    மாடக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளின் உருவம் சுதையாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கம் உள்ள மாடகோவிலில் நந்திதேவன், ஊர்மிளா, சுதை உருவமும், மற்றொன்றில் பஞ்சமூக சிவனும், பார்வதியும் சுதை உருவங்களாக உள்ளன. இவை இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன.

    இவற்றின் வெளிப்பக்கத்தில் திரிபுர சம்கார மூர்த்தியும், மீனாட்சி கல்யாணமும், சந்திரசேகரர் உருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. மேலும் சிவன், யானையைத் தோலுரித்ததும், பிச்சாண்டவர் திருவுருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    மாடக்கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணுவும், மையத்தில் லிங்கோர்ப்பவரும் பக்கத்தில் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணுவின் வடிவங்கள் சுதைகளாக உள்ளன.

    வடக்கு பக்கம் மாடக்கோவில்களில் கிழக்கு நோக்கி பிரம்மாவின் உருவமும், சிவன், பார்வதி உருவமும் அமைந்துள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் ராவணன் கைலாய மலையைத் தூக்கி யாழ்மீட்டிய நிகழ்ச்சியும், உமாமகேஷ்வரர் உருவமும் சுதையாக அமைந்துள்ளன.

    இந்த மாடகோவில்களின் வெளிபக்க மூலைகளில் அரிமாக்கள் நின்றவாறு முன்னங்கால்கள் தூக்கிய நிலையில் நின்றுள்ளன.

    முதல் நிலையில் நான்கு புறமும் ஒற்றை திருவாட்சிகள் இருக்கின்றன. மூலவருக்குப் பின்னால் உமா மகேஸ்வரரின் சுதை உருவமும் நின்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருவறையின் உள்ளே சுற்றி வரும் சாலகார வழி இருந்துள்ளது. தற்போது இது அடைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு போன்று காஞ்சி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் காணலாம். திருவதிகைக்குப் பின்னரே இந்த கோவில்கள் கட்டப்பட்டன.

    • சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
    • 2-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

    2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

    4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
    • ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர்.

    தஞ்சை பெரியகோவிலின் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860-க்கு முன்னர் கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது...

    1858-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய ஜி.யூ.போப், பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.

    அதன் விளைவாக தஞ்சை பெரிய கோவில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.

    பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

    ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!

    இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

    1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோவில் பூகம்பங்கள், படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.

    800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. 1335ல் தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை தேவராயாவின் விஜயநகரின் ஆதிக்கம்... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..

    1772 ஆம் ஆண்டில், கோவிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர். (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோவில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோவிலின் முகப்பு கற்கள் "சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோவில் தோற்றம் பிரகாசமாக மாறியது.

    1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோவிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார். அது மேலும் பிரகாசம் ஊட்டியது. கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

    பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல.. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

    -எஸ்.பி.அந்தோணிசாமி

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார். ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள். வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

    அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார். பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

    முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.

    சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

    நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

    ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

    பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. பஸ் வசதிகள் உள்ளன.
    ×