search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தஞ்சை கோவிலுக்கு  தந்தை கோவில்
    X

    தஞ்சை கோவிலுக்கு தந்தை கோவில்

    • உலகத்து அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
    • சமய பெரியவர்கள் திருவதியை, தஞ்சை பெரிய கோவிலின் தந்தை என்று வர்ணிப்பதுண்டு.

    தஞ்சை பெரிய கோவிலை நாம் உலகத்து அதிசயங்களில் ஒன்று என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தஞ்சை கோவில் கோபுரம் கம்பிரமாக நிற்பதை கண்டு நாம் பெருமையும், ஆச்சரியமும் கொள்கிறோம்.

    ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் மிகப் பிரமாண்டமாக, உலக அதிசய சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்கு அடிப்படையாக இருந்தது திருவதிகை கோவில்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. திருவதிகை கோவில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட ராஜராஜசோழன், சோழ மண்டலத்தில் இப்படியரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.

    எனவேதான் சமயப் பெரியவர்கள் திருவதியை திருத்தலத்தை தஞ்சை பெரிய கோவிலின் தந்தை கோவில் என்று வர்ணிப்பது உண்டு.

    ஆலய அமைப்பு, கருவறை அமைப்பு, லிங்கம் அமைப்பு உள்பட பல விஷயங்களில் திருவதிகை திருத்தலம் போலவே தஞ்சை பெரிய கோவிலும் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவதிகை கோவிலின் கருவறை ராசசிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தேர் போன்று இருக்கிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் மாடகோவில்கள் இருக்கின்றன.

    இந்த மாடகோவில்களில் நான்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மூன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது ஐந்து நிலைகளை உடையது.

    மேல் நிலையில் விமானம் பண்டியல் எண் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்களிலும் அட்ட திக்கு பாலகர்களின் சுதை உருவம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு நிலைகளிலும் நான்கு புறமும் சிவனின் வடிவங்களும், விஷ்ணுவின் வடிவங்களும், பிரம்மாவின் வடிவங்களும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன.

    கல்காரம் எனப்படும் கீழ்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களிலும் சுதை உருவங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    மாடக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளின் உருவம் சுதையாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கம் உள்ள மாடகோவிலில் நந்திதேவன், ஊர்மிளா, சுதை உருவமும், மற்றொன்றில் பஞ்சமூக சிவனும், பார்வதியும் சுதை உருவங்களாக உள்ளன. இவை இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன.

    இவற்றின் வெளிப்பக்கத்தில் திரிபுர சம்கார மூர்த்தியும், மீனாட்சி கல்யாணமும், சந்திரசேகரர் உருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. மேலும் சிவன், யானையைத் தோலுரித்ததும், பிச்சாண்டவர் திருவுருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    மாடக்கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணுவும், மையத்தில் லிங்கோர்ப்பவரும் பக்கத்தில் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணுவின் வடிவங்கள் சுதைகளாக உள்ளன.

    வடக்கு பக்கம் மாடக்கோவில்களில் கிழக்கு நோக்கி பிரம்மாவின் உருவமும், சிவன், பார்வதி உருவமும் அமைந்துள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் ராவணன் கைலாய மலையைத் தூக்கி யாழ்மீட்டிய நிகழ்ச்சியும், உமாமகேஷ்வரர் உருவமும் சுதையாக அமைந்துள்ளன.

    இந்த மாடகோவில்களின் வெளிபக்க மூலைகளில் அரிமாக்கள் நின்றவாறு முன்னங்கால்கள் தூக்கிய நிலையில் நின்றுள்ளன.

    முதல் நிலையில் நான்கு புறமும் ஒற்றை திருவாட்சிகள் இருக்கின்றன. மூலவருக்குப் பின்னால் உமா மகேஸ்வரரின் சுதை உருவமும் நின்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருவறையின் உள்ளே சுற்றி வரும் சாலகார வழி இருந்துள்ளது. தற்போது இது அடைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு போன்று காஞ்சி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் காணலாம். திருவதிகைக்குப் பின்னரே இந்த கோவில்கள் கட்டப்பட்டன.

    Next Story
    ×