search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudukkottai collector"

    • ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
    • அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.

    இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.

    அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?

    ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.

    பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:-

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
    எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    ×