search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை கலெக்டர்"

    • ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
    • அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.

    இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.

    அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?

    ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    ×