என் மலர்
நீங்கள் தேடியது "புதுக்கோட்டை கலெக்டர்"
- ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
- அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?
ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது.
- பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகமாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.
இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டது. இதனால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அறிந்த கலெக்டர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலெக்டர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கை போலீசார் முடக்கினர்.
சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.






