என் மலர்
நீங்கள் தேடியது "protest"
- விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
- பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.
அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 45-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடிக்கிறது.
இதில் விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
- கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தல்.
தஞ்சாவூர்:
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தஞ்சாவூர் அரசு போக்குவரத்து நகர்1 கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ மத்திய சங்கப் பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஐ.என்டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
- கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
- போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது
கோவை,
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களில் அதிகாலை நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மற்ற பஸ்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.
போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
- வண்ணார்பேட்டையில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
- ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கம் நெல்லை கிளை சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு மண்டல தலைவர் தாணு மூர்த்தி தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ராமையா பாண்டியன், செல்வராஜ், ராஜன், கிருபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
ஓய்வு பெற்றோர் ஒருங் கிணைப்பு குழுவின் நெல்லை மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தொடக்க உரையாற்றினார். முத்து கிருஷ்ணன், வெங்கடாசலம், பழனி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். காமராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும், வாரிசு பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதி யர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
- கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் - பழனி சாலையில் வட கவுஞ்சி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், தங்களது கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள மலை கோவில்களுக்கு செல்வதற்கும், விவசாய நிலங்களில் வேலி அமைத்துக் கொள்வதற்கும் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அத்துடன் கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து வட கவுஞ்சி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதை அடுத்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் வருவதற்கு போலீசாரும், வனத்துறையினரும் வருவாய் துறையின் கிராம மக்களை அழைத்தனர். இதை அடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, வனத்துறை சரகர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களை தரக்குறைவாக நடத்தும் வன ஊழியர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் உள்ளிட்டவைகளை எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது என்றும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த பகுதியில் 15,000 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பாணை 16-வெளி வந்த பின்னர் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
- சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
- பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்
காங்கயம்,செப்.25-
பிஏபி பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,
பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பெண் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா்.
போராட்டத்தின் 3 -ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 5 பெண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ேதால்வியில் முடிந்தது.
இதனால் விவசாயிகள் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
- சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நா டகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடக்கிறது.
இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து பெங்களூரில் நாளை (26-ந் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
மேலும் கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடகாவில் நாளை அரசு பஸ்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
சென்னை:
கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த நர்சுகள் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களது பணிக்காலம் முடிவடைந்ததால் அரசு அவர்களை கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவித்தது.
இதை கண்டித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் உண்ணா விரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. சங்கத்தின் மாநில தலைவி விஜயலட்சுமி, துணை தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் தேவிகா ஆகியோர் தலைமையில் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.
பகல்-இரவாக தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டு போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கைக்குழந்தைகளை கையில் ஏந்தி போராட்ட களத்தில் செவிலியர்கள் கலந்து கொண்டது பொது மக்களை கவர்ந்தது.
- தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.
தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
- சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
காங்கயம்:
காங்கயம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி., நிா்வாகம் முறைகேடாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீா் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளக்கோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி., நிா்வாகம் கொடுப்பதில்லை.எனவே விவசாயத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் இந்தக் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றத்தின் தீா்ப்புகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, காங்கயம் அருகே கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
பிஏபி., கிளை வாய்க்காலுக்கு நீா் திறக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தண்ணீா் திருட்டை ஒழித்து தண்ணீா் திறக்கும் சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும். பிஏபி., தொகுப்பு அணைகளின் காலாவதியான ஷட்டா் மற்றும் உபகரணங்களை உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனா்.