என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடையடைத்து உள்ளிருப்பு போராட்டம்
- ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
வணிக வளாகத்தில் முகப்பு வாயிலை அவலப்படுத்தி தரவேண்டும். 2022-23 ஆம் ஆண்டில் கட்டிட பயன்பாட்டிற்கு முன்பே வசூலித்த பிப்ரவரி, மார்ச் மாத வாடகை தொகையை கழித்து தொடர்ந்து வாடகை செலுத்த வகை செய்ய வேண்டும்.
ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாடகையை குறைத்து தர வேண்டும். வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது.
வணிக வளாக பகுதியை சுற்றி வியாபாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலையோர தற்காலிக கடைகளை நடத்த அனுமதிக்க கூடாது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
வணிக வளாக உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் போதுமான மின் விளக்குகள் அமைத்தும், கழிவறைகளை சரியான முறையில் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகள் சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாநகர செயலாளர் சுப்ரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜவுளி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உங்களது 7 கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது வியாபாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் 7 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.






