search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhairavanatha Swamy Temple"

    • சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார்.
    • சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர்.

    சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர். சிவன் கோவிலின் வட கிழக்குப்பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாக காட்சி தருபவர்.

    கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்றும் அறியப்படுகிறார்.

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களை பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். இதையடுத்து தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். அப்போது எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    பைரவ மூர்த்தியை பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், ேஷத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இலங்கையில் ராமர், ராவணனை வதம் செய்தார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக ராமேசுவரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக காசி சென்று சிவலிங்கம் எடுத்து வர வேண்டும் என ஆஞ்சநேயருக்கு உத்தரவிட்டார். ராம பிரானின் உத்தரவுப்படி காசிக்கு புறப்பட்டார் ஆஞ்சநேயர்.

    காசிக்கு சென்று அங்கிருந்து சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் எடுத்து வரும்போது அவருடன் பைரவரும் வந்து விட்டார். சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் ராமேசுவரம் செல்லும் வழியில் நாகை அருகே உள்ள தகட்டூர் என்ற தலத்துக்கு வந்தபோது பைரவருக்கு தகட்டூரில் தங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதன்படி ஆஞ்சநேயரை அசதியில் ஆழ்த்தி விட்டு இங்கேயே உறங்க செய்தார் பைரவர்.

    இந்த நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்த ஆஞ்சநேயர் பைரவரையும், காசி லிங்கத்தையும் தகட்டூரிலேயே விட்டு சென்று விட்டதாக தல புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் வடபாகத்தில் காசி லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில்களில் தகட்டூர் பைரவர் கோவிலும் ஒன்றாகும். வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்சம் நாவல் மரம். தீர்த்தம் காசி தீர்த்தம் ஆகும்.

    மேலும் இக்கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஞான பீடத்தில் சிவபஞ்சாட்சர எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து செய்யும் பரிகாரங்களால் குணம் அடையும் அதிசயத்தை கண் கூடாக பார்க்க முடிகிறது.

    கைகளில் சூலம், மண்டை ஓடு, கயிறு, உடுக்கை மற்றும் பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட மேனியுடன் நிர்வாணமாகவும், நாய் வாகனத்துடனும் பிரதான மூர்த்தியாக பைரவர் தகட்டூரில் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் விசுவநாதர் விசாலாட்சி சன்னதி அமைந்துள்ளது.

    பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்கு எதிரே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    தீர்த்த குளத்திற்கு எதிரே காவல் தெய்வமான ராவுத்தர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பக்தர்கள் வேண்டுதலுக்காக ஆடு, கோழி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியில் உற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. தகட்டூர் பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு யாகம் நடக்கிறது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வேண்டி கொள்வார்கள்.

    பிரசித்திப்ெபற்ற தகட்டூர் பைரவர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    "வடமொழியில் 'யந்திரபுரி' என்றும் தமிழில் 'தகட்டூர்' என்றும் இந்த தலம் அழைக்கப்படுகிறது"

    • காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர்.
    • வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர்.

    காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது.

    குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆணவத்தை அழிக்க சிவபெருமான், கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் 8 வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    ×